ஒரு பெண்ணுக்கு பல கணவர்கள் தென் ஆப்ரிக்க சட்டத்துக்கு எதிர்ப்பு
30 Jun,2021
தென் ஆப்பிரிக்காவில், பெண்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களை திருமணம் செய்து கொள்ள அனுமதி அளிக்கும் திட்டத்துக்கு, பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து உள்ளது.
உலக அளவில் மிக தாராளமான அரசியலமைப்பு சட்டங்கள் உடைய நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது.இங்கு ஓரின திருமணங்கள், ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்வதுஆகியவற்றுக்கு சட்டப்பூர்வமாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருமண விவகாரத்தில் பெண்களுக்கு சம உரிமை அளிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை, நீண்ட நாட்களாக முன்வைக்கப்பட்டு வருகிறது.
'ஒரு ஆண், பல பெண்களை திருமணம் செய்து கொள்ள சட்டம் அனுமதிப்பதை போல, ஒரு பெண், பல ஆண்களை மணக்க அனுமதிக்க வேண்டும்' என, பாலின உரிமை ஆர்வலர்கள் தரப்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.இதையடுத்து திருமண சட்டத்தில் சீர்திருத்தம் செய்து, இதற்கு அனுமதி அளிக்க அரசு முடிவு செய்தது.
இந்த புதிய சட்டம் குறித்து அந்நாட்டு பார்லி.,யில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. மேலும், இந்த புதிய சட்டம் குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்தை அரசு கேட்டது. இதற்கு, கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது.'இது ஆப்பிரிக்க கலாசாரத்தை அழித்துவிடும். பிறக்கும் குழந்தைகளின் எதிர்காலத்தை பாதிக்கும். ஆணின் இடத்தை பெண்ணுக்கு வழங்க முடியாது' என, பல்வேறு விதமான கருத்துக்கள் கூறப்பட்டு உள்ளன.