கியூபாவின் அப்டாலா தடுப்பூசி 92 சதவீத திறனுள்ளது என அறிவிப்பு அப்டாலா தடுப்பூசி
23 Jun,2021
13 மாதங்களில் அப்டாலா தடுப்பூசி தயாரிப்பு பணிகளை மேற்கொண்டு விஞ்ஞானிகள் சாதித்திருப்பதாக கியூபா அதிபர் மிகேல் தியாஸ் கானெல் பாராட்டு தெரிவித்தார்.
கியூபாவில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பூசி அப்டாலா (Abdala) 92 சதவீதம் திறனுடையது என அந்நாடு அறிவித்துள்ளது.
அமெரிக்கா, இங்கிலாந்து, ரஷ்யா, இந்தியா மற்றும் சீனா நாடுகளின் வரிசையில் கியூபாவும் அப்டாலா (Abdala) என்னும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. மற்ற தடுப்பூசிகளைப் போல அல்லாமல் மூன்று முறை செலுத்திக் கொள்ளும் வகையில் அப்டாலா தடுப்பூசி உருவாக்கப்பட்டுள்ளது.
13 மாதங்களில் இதனை விஞ்ஞானிகள் சாதித்திருப்பதாக கியூபாவின் அதிபர் மிகேல் தியாஸ் கானெல் (Miguel Dங்az-Cane) பாராட்டு தெரிவித்தார். ஏற்கனவே கியூபாவில் உருவாக்கப்பட்ட சோபெரானா 2 (Soberana 02) தடுப்பூசி 62 சதவீதம் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 92 சதவீதம் திறன் கொண்ட அப்டாலா பயன்பாட்டிற்கு வந்துள்ளது.
இந்நிலையில், கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் திறன் கொண்டது என மூன்றாம் கட்ட சோதனையின் முடிவில் தெரியவந்துள்ளது. இந்தியாவில் உருவாக்கப்பட்ட கோவாக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மூன்றாம் கட்ட சோதனையில் ஈடுபட்ட பாரத் பயோடெக் நிறுவனம், கடந்த மார்ச் மாதத்தில் இடைக்கால அறிக்கை ஒன்றை வெளியிட்டது.
அதன்படி கொரோனா வைரஸை எதிர்ப்பதில் கோவாக்சின் 81% திறனுள்ளதாக இருப்பதாகவும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின் தொற்று ஏற்பட்டாலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வாய்ப்பு குறைவு என்றும் தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு ஆணையத்தில் மூன்றாம் கட்ட சோதனை முடிவு சமர்ப்பிக்கப்பட்டது. அதனை ஆராய்ந்த வல்லுநர் குழு, கோவாக்சின் தடுப்பூசி 77.8 சதவீதம் திறன் கொண்டது என அறிவித்துள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் பைசர் தடுப்பூசியை பயன்படுத்துவதற்கு ஒப்புதல் பெறும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதாக அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ஆல்பர்ட் போர்லா தெரிவித்துள்ளார். இந்திய அரசுடன் விரைவில் இதற்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்படும் என்று நம்புவதாக அவர் கூறியுள்ளார். இந்தியா உட்பட குறைந்த, நடுத்தர வருவாய் கொண்ட நாடுகளுக்கு 100 கோடி பைசர் தடுப்பூசிகள் இந்த ஆண்டுக்குள் வழங்கப்படும் என்றும் ஆல்பர்ட் போர்லா தெரிவித்தார்.
வெளிநாடுகளில் இருந்து கொரோனா தடுப்பூசி இறக்குமதி செய்வதை துரிதப்படுத்த வேண்டும் என இந்திய தலைமை மருந்து கட்டுப்பாளர் அண்மையில் வலியுறுத்தி இருந்த நிலையில், பைசர் நிறுவனம் இதனை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.