மூத்த தலைவர்களுடனான சந்திப்பின்போது, "நாட்டு மக்களுக்கான உணவு சூழல் தற்போது சிக்கலாகி வருகிறது" என கிம் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஏற்பட்ட சூறாவளி அதன் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் விவசாயத் துறை உற்பத்தி இலக்கை அடையவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வட கொரியாவில் உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்துவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அந்நாட்டின் ஊடகங்கள், ஒரு கிலோ வாழைப் பழம் 45அமெரிக்க டாலர்களுக்கு விற்பதாக (இந்திய மதிப்பில் சுமார் 3 ஆயிரம்) தெரிவிக்கின்றன.
கொரோனா தொற்று பரவலை தடுக்க வட கொரியா தனது எல்லைகளை மூடியது.
இதன் காரணமாக சீனாவுடனான வர்த்தகம் சரிந்தது. வட கொரியா தனது உணவு, எரிபொருள் மற்றும் உரத்திற்கு சீனாவை சார்ந்துள்ளது.
மேலும் வட கொரியாவின் அணு திட்டங்களால் அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளாலும் அந்நாடு தடுமாறி வருகிறது.
ஒரே கட்சியின் அதிகாரம் என்ற நிலை உள்ள வட கொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் நாட்டின் தலைநகரான பியாங்யாங்கில் நடைபெற்ற ஆளும் தொழிலாளர் கட்சியின் மத்திய கமிட்டியில் உணவுப் பற்றாக்குறை குறித்து பேசினார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டால் இந்த காலாண்டில் தேசிய தொழில் துறை வளர்ச்சி பெற்றுள்ளது என்றும் கிம் தெரிவித்தார்.
இந்த சந்திப்பில் அமெரிக்கா மற்றும் தென் கொரியாவுடனான உறவு குறித்தும் அதிகாரிகள் ஆலோசிப்பர் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.
நாட்டில் மீண்டும் ஒரு கடுமையான பஞ்சம் நிகழவிருப்பதாகவும் அதற்கு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் ஏப்ரல் மாதமே தெரிவித்திருந்தார் கிம்.
1990களில் சோவியத் யூனியன் வீழ்ந்தபோது வட கொரியா எந்தவித உதவியும் இன்றி தனித்துவிடப்பட்டது.
அந்த சமயத்தில் வடகொரியாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பது துல்லியமாக தெரியவில்லை. இருப்பினும் 30 லட்சம் பேர் வரை உயிரிழந்தனர் என கணக்கிடப்பட்டுள்ளது.
வட கொரியாவில் உணவுப் பற்றாக்குறை இருப்பதை வட கொரிய அதிபர் வெளிப்படையாக ஒப்புக் கொண்டது அரிதான ஒரு விஷயம் என்கிறார் பிபிசியின் சோல் செய்தியாளர் லாரா பிக்கர்.
மேலும் இது குறித்த அவரின் பார்வை!
வட கொரிய அதிபர் இவ்வாறு தெரிவிப்பது அரிது என்றாலும் தனது பொருளாதார திட்டங்கள் தோல்வியடைந்துவிட்டதாக அவர் ஏற்கனவே ஒப்புக் கொண்டுள்ளார்.
தனது தந்தையிடமிருந்து அதிகாரத்தை எடுத்துக்கொண்டபோது, மக்களுக்கு ஒரு பிரகாசமான எதிர்காலத்தை வழங்கப்போவதாக அவர் தெரிவித்திருந்தார். அவர்களின் மேசையில் உணவு இருக்கும். மின்சாரம் கிடைக்கும் என்று தெரிவித்தார். ஆனால் அது நடைபெறவில்லை. இருப்பினும் அவர் மக்களை மேலும் கடினமாக உழைக்க கோருகிறார்.
வட கொரியாவின் இந்த கடினமான சூழலுக்கு பெருந்தொற்றை காரணம் காட்ட முயற்சிக்கிறார் கிம்.
உலகம் முழுவதும் நிலைமை நாளுக்கு நாள் மோசமடைந்து வருவதாக கட்சியின் அதிகாரிகளிடம் கிம் தெரிவித்தார் என அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்துதான் பல தொண்டு நிறுவனங்களும் கவலை கொள்கின்றன. எல்லைகள் மூடியிருப்பதால் உணவும் மருந்தும் மக்களை சென்று சேராது. பல தொண்டு நிறுவனங்களில் ஊழியர்கள் பற்றாக்குறை மற்றும் பொருட்களின் பற்றாக்குறை இருப்பதால் அவை நாட்டைவிட்டு வெளியேறி வருகின்றன.
வட கொரியா எப்போதும் "தற்சார்போடு" இருப்பதாகவே தெரிவிக்கிறது. நாட்டிற்கு உதவி தேவைப்படும்போது தனது எல்லைகளை மூடிவிட்டது வட கொரியா. மேலும் பிற நாடுகளிடம் உதவி கோருவதும் இல்லை. சர்வதேச உதவிகள் அனைத்தையும் அந்நாடு நிகாரித்துவிட்டது. ஆனால் அதற்கான விலையை அந்நாட்டின் மக்கள்தான் கொடுத்து வருகின்றனர்.