டொனால்டு டிரம்ப் மீது சீன அமைச்சர் குற்றச்சாட்டு
08 Jun,2021
அமெரிக்காவில் கொரோனா வைரசால் அதிகமானோர் பாதிக்கப்பட்டதற்கு, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தான் காரணம்,” என, சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் குற்றஞ்சாட்டி உள்ளார்.
சமீபத்தில், அமெரிக்காவில் நடந்த ஒரு மாநாட்டில் பேசிய, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் கூறுகையில்,'ஆய்வகத்தில் உருவான கொரோனா வைரசின் பரவலை கட்டுப்படுத்த தவறிய சீனா, உலக நாடுகளுக்கு, 750 லட்சம் கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டும்' என்றார். இந்நிலையில், அவருக்கு பதிலடி கொடுத்து சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் வாங் வென்பின் நேற்று கூறியதாவது:அமெரிக்காவில், டொனால்டு டிரம்ப் அதிபராக இருந்தபோது, 2.4 கோடிக்கும் அதிகமானோர், கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.
4.10 லட்சம் பேர் உயிரிழந்தனர்.அப்போது, இந்த மோசமான பாதிப்புகளை ஏற்க மறுத்த டிரம்ப், தன் கடமைகளையும் செய்யத் தவறினார். பின், மக்களை திசை திருப்பும் முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அமெரிக்க மக்களுக்கு இது நன்றாகத் தெரியும். வைரஸ் பரவலுக்கு யார் காரணம் என்பதை, அவர்கள் நன்கு அறிவர். இந்த விவகாரத்தில், சீனாவிடம் இழப்பீடு கோருவதை ஏற்க முடியாது.இவ்வாறு அவர் கூறினார்.