-
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை.
கட்டுப்பாடுகளைத் தளர்த்துவது கொரோனா தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் என என உலக சுகாதார நிறுவன இயக்குனர் டெட்ரோஸ் அதோனம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உருமாறிய கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதுடன், அதிக உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருவதால் அதனை எதிர்கொள்ள உலக நாடுகள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில், கொரோனா தொற்றால் 1,00636 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்தறை தெரிவித்துள்ளது. கடந்த 61 நாட்களில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும். 1,74,000 ஆயிரம் பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். வைரஸ் பாதிப்பால் மேலும் 2,427 பேர் உயிரிழந்தனர்.உலகம் முழுவதும் தினசரி கொரோனா உயிரிழப்புகளில் 28 விழுக்காடு இந்தியாவில் பதிவாகிறது. நாடு முழுவதும் 14,00,609 பேர் சிகிச்சையில் உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 23 கோடியே 27 லட்சத்தை கடந்துள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா தொற்று உறுதியாவோர் விகிதம் கடந்த வாரம் 9.4 விழுக்காடாக இருந்த நிலையில், தற்போது 4.2 விழுக்காடாக சரிந்துள்ளது.
இந்நிலையில், மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. டெல்லியில் மூன்று வாரங்களுக்கு பிறகு மெட்ரோ ரயில் சேவை 50 விழுக்காடு பயணிகளுடன் இயங்க தொடங்கியுள்ளன. அங்கே, சந்தைகள், வணிகவளாகங்கள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. தனியார் நிறுவனங்கள் 50 விழுக்காடு ஊழியர்களுடன் இயங்கி வருகின்றன. இதன்காரணமாக டெல்லி சாலைகளில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் அணிவகுத்ததால் ஆங்காங்கே போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பை, புனே நகரங்களில் பேருந்துகள், உடற்பயிற்சி கூடங்கள், அழகு நிலையங்கள், சந்தைகள் இயங்க தொடங்கியுள்ளன. உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் 40 நாட்களுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டுள்ளன. தேனீர் கடைகளில் மக்கள் கூட்டம் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதேபோல, தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, “இப்போதும் இந்தியா கொரோனாவின் இரண்டாவது அலையோடு போராடிக் கொண்டிருக்கிறது. பலரும் தங்களது அன்புக்கு உரியவர்களை இழந்திருக்கிறார்கள். இந்தியாவில் 23 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டிருக்கின்றன. இந்திய விஞ்ஞானிகள் விரைவில் ஒரு புதிய கொரோனா தடுப்பூசியைக் கண்டுபிடிப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.
இந்தியாவில் கொரோனா தடுப்பூசியின் விநியோகம் வரும் நாட்களில் அதிகரிக்கும். ஏழு நிறுவனங்கள் இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்கின்றன. இன்னும் மூன்று கொரோனா தடுப்பூசிகள் பல கட்ட சோதனைகளில் இருக்கின்றன. தடுப்பூசி மருந்துகளை கொள்முதல் செய்யும் மாநிலங்களின் சுமையை மத்திய அரசே ஏற்கும். 18 முதல் 44 வயதுடையவர்களுக்காக மாநில அரசுகள் கொள்முதல் செய்யும் தடுப்பூசி மருந்துகளுக்கான செலவை இனி மத்திய அரசே ஏற்கும். ஜூன் 21ஆம் தேதி முதல் 18 வயதை கடந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்” என்று கூறினார்.
இதற்கிடையில், சீனாவின் குவாங்ஸோ நகரில் டெல்டா வகை கொரோனா வைரஸால் கண்டறியப்பட்டதால், போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்தது, சீனா, கடந்த மே 21 முதல் ஜூன் 5 ஆம் தேதி வரை நகரம் முழுவதும் நடத்திய பரிசோதனைகளில் 94 பேருக்கு தொற்று உறுதியானது.
இதனால அங்கே பரிசோதனை முகாம்கள் அமைக்கப்பட்டு, இதுவரை 1 கோடியே 60 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. நாள்தோறும் ஒரு லட்சத்து 50 ஆயிரம் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் தற்காலிக ஆய்வகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கண்டறியப்பட்ட டெல்டா வைரஸ் குவாங்ஸோவிற்குள் எப்படி வந்தது என சீனா ஆராய்ந்து வருகின்றது.இந்நிலையில், உலக சுகாதார நிறுவன இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதோனம் உருமாறிய கொரோனா மிகப்பெரிய பேரழிவை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து டெட்ரோஸ் அதோனம் கூறுகையில் “உருமாறிய டெல்டா வகை வைரஸ் உட்பட உருமாறிய கொரோனா வைரஸ் உலகளாவிய பரவுதல் காரணமாக கவலையை ஏற்படுத்தி வருகிறது. கட்டுப்பாட்டை தளர்த்துவது தடுப்பூசி போடாதவர்களுக்கு பேரழிவை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கும்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.