சீட் பெல்ட் அணியுமாறு கூறியதற்காக பெண் ஒருவர் விமானப் பணிப்பெண்ணை தாக்கியதில் அவருக்கு இரு பற்கள் உடைந்தது.
அமெரிக்காவில் விமான சேவை வழங்கி வரும் சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸூக்கு சொந்தமான விமானத்தில் பயணித்த பெண் ஒருவரிடம், சீட் பெல்ட் அணியுமாறு விமானப் பணிப்பெண் கேட்டுக் கொள்கிறார். சாண்டியாகோ பன்னாட்டு விமான நிலையத்தில் விமானம் தரையிறங்க தயாராகிக்கொண்டிருந்தபோது, இந்த அறிவுறுத்தலை வழங்கினார். அதில் கோபமடைந்த பெண், திடீரென விமானப் பணிப்பெண்ணின் முகத்தில் சரமாரியாக தாக்குகிறார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.இதுகுறித்து வெளியான செய்தியில், சவுத்வெஸ்ட் ஏர்லைன்ஸ் விமானம் சேக்ரமெண்டோ (Sacramento) பகுதியில் இருந்து சாண்டியாகோ நகருக்கு பயணித்துக் கொண்டிருந்தது. அதில், 28 வயதான விவயன்னா குயியோனனஸ் (Vyvianna Quinonez) சென்றுள்ளார். விமானம் சாண்டியாகோ நகரில் தரையிறங்க முற்படும்போது, அவர் சீட் பெல்ட் அணியாததை விமானப் பணிப்பெண் கவனித்துள்ளார். அப்போது, சீட் பெல்ட் அணியுமாறு அறிவுறுத்திய அவர், விமான பயணத்தின்போது கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை முறையாக பின்பற்றுமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அவரின் அறிவுரையை கேட்க மறுத்த விவயன்னா, திடீரென தாக்குதலில் ஈடுபட்டார். கை மற்றும் கால்கள் மூலம் சரமாரியாக தாக்கியதில் விமானப் பணிப்பெண்ணுக்கு முகத்தில் பலத்த அடி விழுந்தது. தாடை பகுதியில் விழுந்த அடியில் பற்கள் இரண்டும் உடைந்துபோனது. இதனைப் பார்த்த சக பயணிகள் விவயன்னாவை தடுத்து அமைதியாக இருக்கையில் அமருமாறு கூறினர். விமானப் பணிப்பெண்ணை ஏன் அடிக்கிறீர்கள்? என்றும், அவர்களுடைய பணியை செய்வதில் என்ன தவறு? ஒத்துழைப்பு கொடுக்க வேண்டியது உங்களின் கடமை என்றும் சக பயணிகள் சாடினர்.
விமானம் தரையிறங்கியபிறகு, விவயன்னாவைக் கைது செய்த காவல்துறையினர், பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், விமானத்தில் தகராறு செய்ததற்காக கைது செய்யப்பட்டதாக விளக்கமும் அளித்துள்ளனர். விவயன்னா, விமானப் பணிப்பெண்ணை தாக்கும் வீடியோவை இணையத்தில் பார்வையிட்ட நெட்டிசன்கள் கொந்தளித்துள்ளனர்.
மிகவும் கொடூரமான செயல் என்றும், அந்தப் பெண்ணை குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சிறையில் அடைக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். விமானப் பணிப்பெண்களிடம், அநாகரீகமாக நடந்து கொள்வதை முற்றிலும் தடுக்க அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், இந்தப் பெண்ணுக்கு கொடுக்கும் தண்டனை மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும் என்றும் கூறியுள்ளனர்.
விமானப் பணிப்பெண்ணுக்கு பற்கள் உடைந்தது மட்டுமல்லாது முகத்திலும் காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மருத்துவ சிகிச்சைக்காக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அவருக்கு உரிய சிகிச்சை கொடுக்கப்பட்டு வருவதாகவும் ஏர்லைன்ஸ் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
விமானப் பணிப்பெண்களிடம் இதுபோன்ற அத்துமீறல்கள் தொடர்வதாக கவலை தெரிவித்துள்ள நெட்டிசன்கள், குறிப்பிட்ட நாட்டு அரசுகள் ஒழுங்கீனத்தில் ஈடுபடுவோருக்கு தகுந்த தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்களும் எழுந்துள்ளன