இஸ்ரேலில் கூட்டணி ஆட்சி பதவி விலகுகிறார் நெதன்யாகு
01 Jun,2021
இஸ்ரேலில், எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளன. இதையடுத்து, பிரதமர் நெதன்யாகு பதவி விலக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேற்காசியாவைச் சேர்ந்த இஸ்ரேலில், கடந்த இரண்டரை ஆண்டுகளில் நான்கு முறை பொதுத் தேர்தல் நடந்தது. ஒவ்வொரு தேர்தலிலும், நெதன்யாகுவின் லிக்யுட் கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. இருந்த போதிலும் ஆட்சியமைக்கத் தேவையான பெரும்பான்மை இல்லாததால், நீடிக்க முடியவில்லை.சமீபத்திய தேர்தலுக்குப் பின், ஆட்சி அமைக்க பெரும்பான்மை பலம் இல்லை என, நெதன்யாகு, ஜனாதிபதி ரூவன் ரிவ்லினிடம் தெரிவித்தார். இதையடுத்து, எதிர்க்கட்சி தலைவர் யாயிர் லாபிட்டுக்கு, பெரும்பான்மையை நிருபிக்க, 28 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டது.
இதற்கான, 'கெடு' நாளை முடிவடைகிறது.இந்நிலையில் முன்னாள் ராணுவ அமைச்சரும், யமினா கட்சி தலைவருமான நப்டாலி பென்னட், அனைத்து எதிர்க்கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்க முடிவு செய்துள்ளார். இது குறித்து, நப்டாலி பென்னட் கூறும்போது,''எனக்கும், யாயிர் லாபிட்டுக்கும் கொள்கை வேறுபாடுகள் உள்ள போதிலும், மீண்டும் தேர்தல் வருவதை தடுக்க ஒன்றிணைந்து ஆட்சி அமைக்க உள்ளோம்,'' என்றார்.இந்த கூட்டணியில் நெதன்யாகு விற்கு ஆதரவளித்து வந்த அரபு கட்சியும் தற்போது இணைந்துள்ளது. அதனால் பெரும்பான்மையுடன் எதிர்க்கட்சி ஆட்சி அமையும் சூழல் உருவாகியுள்ளது.
புதிய பிரதமராக யாயிர் லாபிட் பொறுப்பேற்பார் என, தெரிகிறது. இரண்டு ஆண்டுகள் கழித்து, அவர் பதவி விலகி, நப்டாலி பென்னட் பிரதமராக வழி விடுவார். இதன் வாயிலாக, 2009 முதல் இஸ்ரேல் பிரதமராக உள்ள நெதன்யாகு விரைவில் பதவிவிலகுவார் என, தகவல் வெளியாகியுள்ளது.