கொரோனா வைரஸ் தோற்றம்: அமெரிக்க ஆய்வகங்களை விசாரிக்க கோரும் சீனா
27 May,2021
சீனாவின் வூஹான் ஆய்வகத்தில் கொரோனா வைரஸ் உருவாகியிருக்கலாம் என அமெரிக்கா கூறி வரும் நிலையில், உலக சுகாதார நிறுவனத்தின் விசாரணைக்கு அமெரிக்க ஆய்வகங்களையும் உட்படுத்த வேண்டும் என சீனா கூறியுள்ளது.
2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் வூஹான் நகரிலிருந்து கொரோனா வைரஸ் உலகுக்கு பரவியது. வவ்வாலிடமிருந்து ஏதோ ஒரு காட்டு விலங்குக்கு பரவி, அவ்விலங்கிலிருந்து இவ்வைரஸ் மனிதனுக்கு பரவியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. மற்றொருபுறம் இது வூஹான் வைரஸ் ஆய்வகத்திலிருந்து வெளியிடப்பட்டது என்ற கருத்தும் பரவியுள்ளன. உலக சுகாதார அமைப்பின் விஞ்ஞானிகள் வைரஸின் தோற்றத்தை அறிய இந்த ஆண்டு ஜனவரியில் வூஹான் நகருக்கு நேரடியாக சென்றனர்.
சர்வதேச நாடுகளைச் சேர்ந்த 13 விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தினார்கள். எந்த ஒரு முடிவும் அதில் எட்டப்படாததால் அந்த ஆய்வு பற்றிய அறிக்கை இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால் புதிய விசாரணைக்கு அழுத்தம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் 'வால் ஸ்டீர்ட் ஜர்னல்' பத்திரிகையில், வூஹானில் கொரோனா முதல் பாதிப்பு அறிவிக்கப்பட்டதற்கு ஒரு மாதம் முன்பு, அதாவது நவ., 2019-ல் 3 ஆய்வக ஊழியர்கள் கொரோனா அறிகுறிகளுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக, அமெரிக்க உளவு பிரிவின் தகவல்களை வெளியிட்டது.
அதனைத் தொடர்ந்து மீண்டும் வூஹான் ஆய்வகம் மீது கவனம் குவிந்துள்ளது. மேலும் அப்பத்திரிகையில், 7 ஆண்டுகளுக்கு முன் தென்மேற்கு சீனாவில் உள்ள ஒரு சுரங்கத்தில், தொழிலாளர்களிடம் மாதிரிகளை சேகரித்ததாகவும், அவர்கள் வவ்வால் மூலம் பரவும் ஒரு புதிய கொரோனா வைரஸால், மர்ம நோய் பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனர் என்றும் கூறியுள்ளது.
சீனாவின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ஆய்வகத்திலிருந்து கொரோனா வைரஸ் கசிந்தது போன்ற சதி கோட்பாடுகளையும், தவறான தகவல்களையும் அமெரிக்கா பரப்பி வருகிறது. இதன் மூலம் உலக சுகாதார நிறுவன ஆய்வுக்கு அவமரியாதை ஏற்படுத்தியுள்ளனர். இது போன்ற விஷயங்கள் வைரஸை எதிர்த்து போராடுவதற்கான உலகளாவிய ஒற்றுமையை குலைக்கும்.
அமெரிக்காவையும் விசாரிக்கணும்!
அமெரிக்கா உண்மையில் முழு வெளிப்படைத்தன்மையை விரும்பினால், சீனா செய்ததை போல, உலக சுகாதார நிபுணர்களை விசாரணை செய்ய தங்கள் நாட்டிற்கு அழைக்க வேண்டும். போர்ட் டெட்ரிக் உயிரி மருத்துவ ஆய்வகத்தை அவர்களுக்கு விரைவில் திறந்து விட வேண்டும். மேலும் உலகம் முழுவதும் அமெரிக்காவுக்கு உள்ள உயிரி ஆய்வகங்களையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும். என கூறியுள்ளார்.