கோவிட் பரவியது எப்படி? விசாரணைக்கு பைடன் உத்தரவு!
27 May,2021
சீனாவில் உள்ள ஆய்வு மையத்தில் இருந்து தான் கோவிட் வைரஸ் பரவிஉள்ளதாக புதிய அறிக்கை வெளியானதையடுத்து, இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தும்படி உளவு அமைப்புகளுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உத்தரவிட்டுஉள்ளார்.
சீனாவின் வூஹான் நகரில், 2019 டிச.,ல் முதன் முதலில் கோவிட் வைரஸ் தென்பட்டது. இதுவரை உலகெங்கும் இந்த வைரசால், 16.8 கோடி பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில், 35 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.வூஹானில் உள்ள கடல் விலங்குகள் சந்தையில் இருந்து இந்த வைரஸ் பரவியதாக சீனா கூறி வருகிறது.ஆனால், 'வூஹானில் உள்ள வைரஸ் ஆய்வு மையத்தில் இருந்து தான், இது பரவி உள்ளது' என, அமெரிக்கா உட்பட பல நாடுகள் கூறி வருகின்றன.
இது தொடர்பாக விசாரித்த உலக சுகாதார அமைப்பு, 'வூஹான் ஆய்வு மையத்தில் ஏற்பட்ட விபத்தால், வைரஸ் பரவியதற்கு வாய்ப்பில்லை' எனக் கூறிஉள்ளது. இதை உலக நாடுகள் ஏற்கவில்லை.வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து, அமெரிக்க புலனாய்வு அமைப்புகள் விசாரணை நடத்தின. 'பரவலுக்கான காரணத்தை உறுதிப்படுத்த முடியவில்லை' என, அதில் குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.சமீபத்தில் ஒரு அறிக்கையை அமெரிக்க புலனாய்வு அமைப்பு வெளியிட்டுள்ளது.அதில், 'வூஹான் வைரஸ் ஆய்வு மையத்தில் பணியாற்றிய பல ஆராய்ச்சியாளர்கள், 2019ல் உடல்நலம் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையடுத்து, வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து தீவிர விசாரணையை இரட்டிப்பாக்கும்படி, உளவு அமைப்புகளுக்கு, ஜோ பைடன் உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது:வைரஸ் பரவலுக்கான காரணம் குறித்து சில சந்தேகங்கள் எழுப்பப்பட்டுள்ளன. அதனால், விசாரணையை இரட்டிப்பாக்கும்படி, உளவு அமைப்புகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.விசாரணை அறிக்கையை, 90 நாட்களுக்குள் அளிக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.வைரஸ் பரவலுக்கான முழு காரணம் தெரிய ஒத்துழைக்கும்படி, நட்பு நாடுகளுடன் இணைந்து, சீனாவுக்கு நெருக்கடி தருவோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.