இஸ்ரேல் குண்டுவீச்சில் 1,000 வீடுகள் அழிப்பு
25 May,2021
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில், இஸ்ரேல் ராணுவத்தின் குண்டு வீச்சில் 1,000க்கும் அதிகமான வீடுகள் அழிந்திருக்கும் என, ஐ.நா., மதிப்பிட்டுள்ளது.
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே 11 நாட்கள் நடந்த சண்டை, ஐ.நா., அமெரிக்கா முயற்சியால் முடிவுக்கு வந்துள்ளது. இந்த சண்டையில் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த 248 பேர், இஸ்ரேல் தரப்பில் 12 பேர் பலியாகியுள்ளனர். இஸ்ரேல் ராக்கெட் குண்டு வீச்சில், காசா பகுதியில் 1.000க்கும் அதிகமான வீடுகள் தரை மட்டமாகியுள்ளன.மேலும், ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாக, ஐ.நா., மனித உரிமை ஆணையத்தின் அமைப்பாளர் லைன் ஹேஸ்டிங்ஸ் தெரிவித்து உள்ளார். கடந்த 2014ல், இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே, 50 நாட்கள் சண்டை நடந்தது.
அப்போது 1.41 லட்சம் வீடுகள் அழிக்கப்பட்டன.காசாவில் மூன்று நாட்களாக இடிபாடுகளை அகற்றும் பணியில் நுாற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சண்டையில், தன் வீட்டை இழந்த பெய்ட் ஹனன் நகரைச் சேர்ந்த, ரமீஸ் அல் மஸ்ரி கூறியதாவது:கடந்த போரில், இஸ்ரேல் குண்டு வீச்சில் என் வீடு தரைமட்டமானது. இதையடுத்து, ஐ.நா., நிதியுதவியில் மூன்று ஆண்டுகளாக வீடு கட்டி குடியேறினேன். தற்போதைய போரில், அதிகாலை, 3:00 மணியளவில், இஸ்ரேல் தரப்பில் இருந்து குண்டு வீசப்போவதாகவும், வீட்டில் இருந்து வெளியேறுமாறும் உத்தரவிடப்பட்டது.
உடனே, என் குடும்பத்தினர் 16 பேருடன் வெளியேறினேன். இப்போது என் மகன், மகள்கள் ஆளுக்கொரு பக்கமாக உறவினர் வீடுகளில் உள்ளனர். இந்த போரிலும், என் வீடு குண்டு வீச்சில் தரைமட்டமாகியுள்ளது. மீண்டும் எப்போது வீடு கட்டி வசிக்கப் போகிறேன் என தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.