இன்று உலகம் முழுதும் பரவியுள்ள கொரோனா வைரஸ் முதன் முதலாக பரவுவதற்கு முன்பாகவே சீனாவின் வூகான் வைரஸ் ஆய்வுக் கழகத்தில் பணியாற்றிய 3 ஆய்வாளர்கள் தங்களுக்கு தொற்று இருப்பதாகவும் மருத்துவமனை சிகிச்சை தேவை என்றும் கூறியதாக அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் ஜர்னல் பரபரப்பு செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது நவம்பர் 2019-லேயே இந்த ஆய்வாளர்கள் தொற்று இருப்பதாக தங்களுக்கு மருத்துவமனை சிகிச்சைக் கோரியுள்ளனர்.
அதாவது இதுவரை வெளிவராத அமெரிக்க உளவுத்துறை அறிக்கையைச் சுட்டிக்காட்டி வால்ஸ்ட்ரீட் ஜர்னல் இதைத் தெரிவித்துள்ளது.
இந்த புதிய அறிக்கையின் படி வூகான் வைரஸ் ஆய்வு சோதனைக்கூடத்தில் கொரோனாவினால் பாதிக்கப்பட்ட ஆய்வளர்களின் எண்ணிக்கை, அவர்களது மருத்துமனை வருகைப் பதிவுகள், அவர்கள் நோய்வாய்ப்பட்ட காலம் ஆகியவை இந்த வூகான் சோதனை நிலையத்திலிருந்துதான் வைரஸ் கசிந்துள்ளது என்ற ஐயத்தின் மீதான உறுதிப்பாட்டை வலுவடையச் செய்துள்ளது.
கோவிட்-19 குறித்த அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தைகளை உலகச் சுகாதார அமைப்பு நடத்தவுள்ள நிலையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் பைடன் நிர்வாகமும் கோவிட்-19 பெருந்தொற்றின் ஆரம்பகால பரவல் ஏற்பட்ட விதம் குறித்து ஏகப்பட்ட கேள்விகளை தன்னகத்தே கொண்டுள்ளது. சீனாவிலிருந்துதான் இந்த கொரோனா கொடூர வைரஸ் வெளியாகியுள்ளது என்ற சந்தேகம் பரவலாக எழுந்து வருகிறது.
அமெரிக்கா, நார்வே, கனடா, பிரிட்டன் மற்றும் பிற நாடுகள் மார்ச் மாதமே உலகச் சுகாதார அமைப்புத் தலைமை விசாரணைகள் குறித்த கவலைகளை வெளியிட்டன. மேலும் கொரோனா ஆரம்பகால பரவல், அதன் விலங்கு, மனித தொடக்கம் பற்றி தரவுகளை ஆராய அவற்றை அளிக்க வேண்டும் என்று உலக நாடுகள் வலியுறுத்தின.
குறிப்பாக அமெரிக்கா, இந்த விஷயத்தில் சீனா வெளிப்படைத்தன்மையுடன் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தது. இதற்கு வாஷிங்டனில் உள்ள சீன தூதரகம் உடனடியாகப் பதில் அளிக்கவில்லை.
கடந்த பிப்ரவரியில் உலகச் சுகாதார அமைப்பு வூகான் வைரஸ் ஆய்வுக்கூடத்துக்கு சென்று விசாரணை நடத்தியதிலிருந்து ஆய்வுக்கூடத்திலிருந்து கசியவில்லை என்று முடிவுக்கு வந்ததை ஞாயிறன்று சீன வெளியுறவு அமைச்சகம் மீண்டும் ஒருமுறை அறிவுறுத்தியது.
மேலும் சீனா கூறும்போது, “அமெரிக்கா மீண்டும் மீண்டும் சீனா லேபிலிருந்து வைரஸ் கசிந்ததாக ஊதிப்பெருக்கி கூறிவருகிறது” என்று குற்றம்சாட்டியது.
இந்நிலையில் முன்னாள் அதிபர் ட்ரம்ப் நிர்வாகத்தின் இறுதிக் காலக்கட்டத்தில் வெளியான அறிக்கையில், நவம்பர் 2019-லேயே வூகான் வைரஸ் ஆய்வு நிலையத்தின் பல ஆராய்ச்சியாளர்களுக்கு தொற்று ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை கோரியுள்ளனர், அதாவது முதல் தொற்றை மக்களிடத்தில் கண்டுப்பிடிக்கும் முன்னரே இது நடந்துள்ளது, என்று தெரிவித்துள்ளது.
அமெரிக்க தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாசிக்கும் செனேட்டர் ரேண்ட் பால் என்பவருக்குமான உரையாடல் ஒன்று வைரலான போது என்.ஐ.எச். பல ஆண்டுகளாக வூகான் லேபுக்கு நிதியளித்தது பற்றி கடுமையான கேள்விகள் எழுப்பினார். ஆனால் பாசி சரியாக இதற்கு பதில் அளிக்கவில்லை என்று அமெரிக்க ஊடகங்களில் செய்தி வெளியானதும் கவனிக்கத்தக்கது.
இன்று கொரோனா வைரஸ் உலகில் பல லட்சக்கணக்கான உயிர்களைப் பறித்து கொண்டிருக்கும் நிலையிலும் கொரோனா வைரஸ் எங்கிருந்து தோன்றியது என்பதை கண்டுப்பிடிக்க முடியவில்லை என்பதுதான் எதார்த்த நிலையாக இருந்து வருகிறது