ரஷிய நிறுவனம் மீதான பொருளாதார தடை நீக்கம் - ஜோ பைடன் நடவடிக்கைக்கு சொந்தக்கட்சியில் எதிர்ப்பு
20 May,2021
ரஷியாவுக்கும், ஜெர்மனிக்கும் இடையே சர்ச்சைக்குரிய எரிவாயு குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த எரிகுழாய் திட்டம், ரஷிய அதிபர் மாளிகைக்கு ஒரு பெரிய புவிசார் அரசியல் பரிசு என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.
பால்டிக் கடலுக்கு அடியில் ரஷிய ஆர்க்டிக்கில் இருந்து ஜெர்மனிக்கு எரிவாயுவை எடுத்துச்செல்லும் திட்டம் இது. இந்த திட்டத்தின் 95 சதவீத பணிகள் முடிந்து விட்டன.
இந்த திட்டத்தை நிறைவேற்றுகிற நிறுவனம் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்திருந்தது. அந்த நிறுவனத்தை வழிநடத்தும் ரஷிய அதிபர் புதினின் கூட்டாளியான நிர்வாகி மீதும் இந்த தடை விதிக்கப்பட்டிருந்தது.
இந்த தடைகளை அமெரிக்கா திடீரென நீக்கி உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றத்துக்கு அந்த நாட்டின் வெளியுறவுத்துறை அளித்த அறிக்கையில் இந்த நடவடிக்கை பற்றி தெரிய வந்துள்ளது.
இப்போது இந்த நிறுவனத்தின் மீதும், நிர்வாகி மீதும் விதிக்கப்பட்ட பொருளாதார தடைகள், தேசிய நலனின் அடிப்படையில் அகற்றப்பட்டுள்ளதாக அமெரிக்கா கூறுகிறது.
ஆனால் ஜோ பைடனின் இந்த நடவடிக்கைக்கு அவரது சொந்தக்கட்சியான ஜனநாயகக்கட்சியிலேயே எதிர்ப்பு எழுந்துள்ளது.
இதுபற்றி செனட் சபையின் வெளியுறவு கமிட்டி தலைவரான பாப் மெனண்டெஸ் எம்.பி. கருத்து தெரிவிக்கையில், “இந்த பொருளாதார தடை ரத்தை திரும்பப்பெற வேண்டும். நாடாளுமன்றத்தினால் கட்டாயப்படுத்தப்பட்ட பொருளாதார தடைகளை ஜோ பைடன் நிர்வாகம் தொடர வேண்டும். இந்த முடிவு, ஐரோப்பாவில் ரஷிய ஆக்கிரமிப்பை எதிர்ப்பதற்கான அமெரிக்காவின் முயற்சிகளை எவ்வாறு முன்னேற்றும் என்பதை பார்க்க தவறி விட்டனர்” என குறிப்பிட்டுள்ளார்.