இந்தியாவின் நிலைமை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது - உலக சுகாதார நிறுவனம் வருத்தம்
18 May,2021
இந்தியாவின் நிலை இன்னமும் கலைக்குரியதாக உள்ளது என்று உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்துவருகிறது. இந்தியாவில் நாள் ஒன்றுக்கு சுமார் 4 லட்சம் பேர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுவருகின்றனர். கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையிலும் கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனா முதல்அலையை விட இரண்டாவது அலையில் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துவருகிறது.
கொரோனா பாதிப்பால் இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு சுமார் 4,000 பேர் வரை உயிரிழந்துவருகின்றனர். கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடுதலாக இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு கட்டுக்கடங்காமல் இருப்பது உலகநாடுகளை கவலைக் கொள்ளச் செய்துள்ளது.
இந்தியாவின் கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து பேசிய உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ராஸ் அதானம், ‘இந்தியாவின் நிலைமை இன்னும் அதிக கவலைக்குரியநிலையில் உள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை, உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை, மருத்துவமனைகளில் நிலைமை கவலையளிப்பதாக உள்ளது. இந்தியாவுக்கு உதவும் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். முதல் வருடத்தை விட இரண்டாவது ஆண்டும் மிகவும் மோசமானதாக உள்ளது’ என்று தெரிவித்துள்ளார்.