சூயஸ்' கால்வாயில் சிக்கிய கப்பல் முடக்கம்
13 May,2021
'சூயஸ்' கால்வாயில் சிக்கி வர்த்தகத்தை பெரிதும் பாதித்த 'எவர் கிவன்' சரக்கு கப்பலை எகிப்து அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.
எகிப்தில் மத்திய தரைக்கடல் பகுதியையும் செங்கடலையும் இணைக்கும் சூயஸ் கால்வாய் 1869ல் கப்பல் போக்குவரத்திற்காக திறக்கப்பட்டது. இந்த கால்வாய் 163 கி.மீ. நீளமும் 300 மீட்டர் அகலமும் உடையது.கடந்த மார்ச் 22ம் தேதி சீனாவில் இருந்து பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான சரக்கு கண்டெய்னர்களுடன் ஜப்பானின் 'ஷோய் கிசென் கைஷா லிமிடெட்' நிறுவனத்திற்கு சொந்தமான 'எவர் கிவன்' என்ற சரக்கு கப்பல் இந்த கால்வாய் வழியாக பயணித்தது. அப்போது பலத்த காற்று வீசியதில் அந்த கப்பல் கால்வாயில் குறுக்கு வசமாக சிக்கிக் கொண்டது. கடும் போராட்டத்திற்கு பின் மார்ச் 29ம் தேதி அந்த கப்பல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. உலக சரக்கு கப்பல் போக்குவரத்தில் 15 சதவீதம் இந்த கால்வாய் வழியாக தான் நடக்கிறது.
இந்த கப்பல் சிக்கிக் கொண்டதால் உலக வர்த்தகம் பெரிதும் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் சூயஸ் கால்வாயில் சிக்கி வர்த்தக பிரச்னை ஏற்படுத்திய அந்த எவர் கிவன் கப்பலை எகிப்து அதிகாரிகள் முடக்கி உள்ளனர். 'கப்பலின் உரிமையாளரிடம் இருந்து இழப்பீடு பெறும் வரை எவர் கிவன் கப்பல் நாட்டில் இருந்து புறப்படக்கூடாது' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் உரிமையாளரான ஷோய் கிசென் கைஷா லிமிடெட் நிறுவனத்திடம் 6600 கோடி ரூபாய் இழப்பீடாக கோரப்பட்டுள்ளதாகவும்; இது தொடர்பாக இருதரப்புக்கும் இடையே பேச்சு நடந்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன.