காற்றில் பரவும் கொரோனா; 6 அடிக்கு மேல் பரவலாம் - அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம்காற்றில் பரவும் கொரோனா
கொரோனா வைரஸ் தொற்று காற்றிலேயே பரவும் தன்மை கொண்டிருப்பதாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (CDC) தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் சீனாவின் வுஹானில் இருந்து பரவியதாக நம்பப்படுகிறது. இதன் காரணமாக கடந்த ஆண்டு இந்தியா உட்பட பல்வேறு நாடுகளும் மாதக்கணக்கில் முழு ஊரடங்கை பிறப்பித்தது. இந்த வைரஸ் தொற்றின் முதல் அலை சுமாரான பாதிப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை இந்தியாவில் சுனாமி போன்ற பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
தினந்தோறும் 4 லட்சத்திற்கும் அதிகமானவர்களும், 4,000க்கு மேற்பட்டவர்கள் பலி ஆகி வருவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாள் தோறும் லட்சக்கணக்கிலானவர்கள் பாதிப்புக்கு ஆளாகிவருவதால் மருத்துவமனைகளில் அனுமதி கிடைக்காமல் திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. வைரஸ் பரவாமல் தடுப்பதில் முகக்கவசமும், சமூக இடைவெளியுமே நம்மிடம் இருக்கும் தடுப்பு நடவடிக்கையாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே கொரோனா வைரஸ் தொற்று காற்றிலேயே பரவும் என அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம் (CDC) தெரிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
கொரோனா வைரஸ் தொடர்பான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ள அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான மையம், கொரோனா வைரஸ் காற்றிலேயே பரவு தன்மை கொண்டிருப்பதாக கூறியுள்ளது. Lancet என்ற மருத்துவ பத்ரிகை இதே கருத்தை கடந்த மாதம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.
மூச்சு விடும்போது, பேசும்போது, பாடும்போது, உடற்பயிற்சி செய்யும்போது, தும்முவது, இருமுவது என கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபரின் செயல்களில் இருந்து இந்த வைரஸ் தொற்று காற்றில் நீர்க்குமுழிகளாக கலந்துவிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்ட நபரிடமிருந்து காற்றிலேயே 6 அடிக்கும் மேல் வரை கொரோனா வைரஸ் பரவும் தன்மை கொண்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்.யூ.வி காருக்குள் பாலியல் வன்புணர்வு செய்ய முடியுமா?: ஆர்.டி.ஓவிடம் அறிக்கை கேட்ட காவல்துறை!
பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து 3 அடி வரை மிக தீவிரமான பாதிப்புகள் பரவலாம் எனவும் 6 அடிக்கும் மேல் இருந்தால் பரவும் தன்மை குறையும் என சிடிசி தெரிவித்துள்ளது.
மூக்கை நன்றாக மறைக்கும் மாஸ்க் அணிவது, 6 அடிக்கும் மேலான சமூக இடைவெளி பேணுதல், தேவையான காற்றோட்டம், வீட்டினுள் கூட்டம் சேராமல் இருப்பது போன்ற நடவடிக்கைகள் வைரஸ் பரவாமல் தடுக்க உதவும் எனவும் சிடிசி தெரிவித்துள்ளது.