தடுப்பூசி மூலப்பொருள்: கைவிரித்தது அமெரிக்கா
24 Apr,2021
கொரோனா தடுப்பூசி மருந்து தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க அமெரிக்கா மறுத்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தடுப்பூசி மருந்து தயாரிப்பை அதிகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.தடுப்பூசி தயாரிக்க தேவையான மூலப்பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கி ஏற்றுமதியை அனுமதிக்கும்படி அமெரிக்க அரசிடம் கோரிக்கை விடுத்தது.
இது குறித்து அமெரிக்க வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ் கூறியதாவது:அமெரிக்கா தான் உலகிலேயே கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இறந்துள்ளனர்.அதனால் தடுப்பூசி தேவையை கருதி போர்க்கால ராணுவ தயாரிப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சட்டப்படி உள்நாட்டு நிறுவனங்கள் தடுப்பூசி மருந்திற்கான மூலப்பொருட்களை முதலில் அமெரிக்க நிறுவனங்களுக்கு தான் வழங்க முடியும்; ஏற்றுமதி செய்ய முடியாது. உள்நாட்டு மக்களை கொரோனா பாதிப்பில் இருந்து காத்து அவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி மருந்து கிடைப்பதை உறுதி செய்யும் இரு முக்கிய கடமைகள் அமெரிக்க அரசுக்கு உள்ளன.
அமெரிக்க மக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொண்டால் அவர்கள் வாயிலாக வெளி நாடுகளுக்கு கொரோனா பரவாது.இது ஒரு வகையில் உலக மக்களை காக்கும் நடவடிக்கை என்றும் கூறலாம். உலக சுகாதார நிறுவனத்தின் 'கோவக்ஸ்' தடுப்பூசி திட்டத்திற்கு அமெரிக்கா 15 ஆயிரம் கோடி ரூபாய் வழங்கியுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
அமெரிக்கா ஜூலை 4ம் தேதிக்குள் நாட்டு மக்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி மருந்து செலுத்த முடிவு செய்துள்ளது.அதன் பிறகே தடுப்பூசி மருந்தின் மூலப்பொருட்கள் ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்ட தடையை தளர்த்தும் என தெரிகிறது.
அமெரிக்க எம்.பி.க்கள் ஆதரவு
இந்தியாவுக்கு கொரோனா தடுப்பூசி மூலப்பொருட்களை ஏற்றுமதி செய்ய எட்வர்ட் மார்க்கே, கிரிகோரி, மீக்ஸ் உள்ளிட்ட பல எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். 'அமெரிக்க மக்களின் தேவைக்கு அதிகமாகவே கொரோனா தடுப்பூசி மருந்து உள்ளது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவ மறுக்கிறோம். அமெரிக்க அரசு பொறுப்புடன் இந்தியாவிற்கு உதவ முன்வர வேண்டும்' என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.