இந்தியாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடு: சிங்கப்பூர் அறிவிப்பு
21 Apr,2021
இந்தியாவில் இருந்து சிங்கப்பூர் வரும் பயணிகள் கூடுதலாக 7 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சிங்கப்பூர் அறிவித்துள்ளது. சிங்கப்பூர் சுகாதாரத்துறை இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில், “ வரும் 22 ஆம் தேதி முதல் இந்தியாவில் இருந்து வரும் பயணிகள் பிரத்யேக மையங்களில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவதுடன் கூடுதலாக 7 நாட்கள் வீட்டிலும் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.
ஏற்கனவே பிரத்யேக மையங்களில் உள்ளவர்களுக்கும் இது பொருந்தும். பிரத்யேக மையங்களில் 14-ஆம் நாளில் கொரோனா பரிசோதனை செய்யப்படும். பின்னர் வீட்டுத்தனிமை முடியும் நாளிலும் கொரோனா பரிசோதனை செய்யப்படும்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலை வேகமாக பரவி வரும் நிலையில், இத்தகைய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை சிங்கப்பூர் மேற்கொண்டுள்ளது. ஏற்கனவே, அமெரிக்கா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகள் இந்திய பயணிகளுக்கு கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ளன.