2022-ம் ஆண்டில் ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் செலுத்தப்படும் அதிகாரி தகவல்
15 Apr,2021
அமீரகத்தின் நிலவு பயண திட்டத்தில் திட்டமிடப்பட்ட 2 ஆண்டுகளுக்கு முன்கூட்டியே வருகிற 2022-ம் ஆண்டில் ராஷித் ரோவர் வாகனம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.
இது குறித்து துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் நிலவு பயண திட்ட மேலாளர் டாக்டர் ஹமத் அல் மர்சூகி கூறியதாவது:-
நிலவு பயண திட்டம்
அமீரகத்தில் நிலவு பயண திட்டத்தை கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் துணை அதிபர் மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம் அறிவித்தார். இந்த திட்டத்தில் துபாய் முகம்மது பின் ராஷித் விண்வெளி ஆய்வு மையத்தின் சார்பில் நிலவில் ஆய்வு செய்ய உருவாக்கப்படும் ரோவர் வாகனத்திற்கு துபாயின் மறைந்த முன்னாள் ஆட்சியாளர் ஷேக் ராஷித் பின் சயீத் அல் மக்தூம் நினைவாக ‘ராஷித்’ என்ற பெயர் சூட்டப்பட்டது.
இந்த நிலவு பயண திட்டத்தில் 100 சதவீதம் அமீரகத்தில் உள்ள பொறியாளர்கள், விஞ்ஞானிகளால் ராஷித் ரோவர் மாதிரி வடிவமாக தற்போது உருவாக்கப்பட்டு வருகிறது. அமீரகத்தின் ராஷித் ரோவர் வாகனம் இதுவரை நிலவில் யாரும் தடம் பதிக்காத பகுதிகளில் ஆய்வு செய்வதற்காக உருவாக்கப்படுகிறது. பொதுவாக வேற்று கிரகங்களுக்கு அனுப்பப்படும் ரோவர் வாகனங்கள் தரையிறங்க லேண்டர் எனப்படும் விண்கலங்களின் உள்ளே வைத்து அனுப்பப்படுகிறது.
லேண்டர் விண்கலம்
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டுகளில் இதுவரை அமெரிக்கா, சீனா மற்றும் ரஷியா ஆகிய நாடுகள் ரோவர் வாகனத்தை வெற்றிகரமாக நிலவில் விட்டு ஆராய்ச்சியை மேற்கொண்டன. அதனை தொடர்ந்து அமீரகம் நிலவுக்கு ரோவர் வாகனத்தை அனுப்ப திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்காக ஜப்பான் நாட்டின் ஐ-ஸ்பேஸ் நிறுவனத்துடன் முகம்மது பின் ராஷித் விண்வெளி மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது. இதன் மூலம் அந்த நாட்டில் உருவாகும் ‘ஹக்குட்டோ- ரெபூட்’ என்ற லேண்டர் விண்கலத்தில் வைத்து அமீரகத்தின் ‘ராஷித்’ ரோவர் வாகனம் விண்ணில் அனுப்பப்படும்.
ராஷித் ரோவர் தரையிறக்கப்படும்
லேண்டரில் இருந்து வெளிவரும் ராஷித் ரோவர் வாகனம் நிலவின் பல்வேறு நிலப்பரப்புகளில் ஆய்வினை மேற்கொள்ள உள்ளது. லேண்டர் விண்கலம் நிலவில் தரையிறங்கியவுடன் ‘ராஷித்’ ரோவர் வாகனம் தனியாக பிரித்து விடப்பட்டு நிலவின் பல்வேறு நிலப்பரப்புகளில் வினாடிக்கு 10 செ.மீ. என்ற வேகத்தில் ஊர்ந்து சென்று அதில் பொருத்தப்பட்டுள்ள நுண்ணோக்கியால் மண்ணை ஆய்வு செய்யும்.
இந்த ராஷித் ரோவர் கொண்டு செல்லப்படும் லேண்டர் தரையிறங்க மென்மையான நிலப்பரப்புகள் வேண்டும். எனவே அதற்காக நிலவின் முன் பகுதியில் (பூமிக்கு நேராக உள்ளது) வட மற்றும் தென் துருவத்தில் உள்ள 5 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் ஒரு பகுதியில் ராஷித் ரோவர் தரையிறக்கப்படும்.
2022-ம் ஆண்டில் பயணம்
தற்போது அமீரக நிலவு பயணத்திட்டமானது மிக விரைவாக நடைபெற்று வருவதால் ஏற்கனவே திட்டமிடப்பட்டதற்கு 2 ஆண்டுகள் முன்னதாக ராஷித் ரோவர் வாகனம் வரும் 2022-ம் ஆண்டில் விண்ணில் ஏவப்பட உள்ளது.
இது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்தில் இருந்து ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் பால்கன் 9 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ரோவர் வாகனம் அனுப்பும் தகவல்கள் உலகின் பல்வேறு விண்வெளி ஆராய்ச்சி மையங்களுக்கு பகிரப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.