அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசிக்கு தடை?
15 Apr,2021
உலகம் முழுவதும் கோவிட் 19 வைரஸ் தொற்று தொடர்ந்து பரவி வருகிறது. அதை தடுக்க பல தடுப்பு மருந்துகள் மக்களுக்கு போடப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவில் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனமும் கோவிட் 19 தடுப்பு மருந்தை தயாரித்து பயன்பாட்டுக்கு விட்டுள்ளது. ஒரே டோஸாக செலுத்தக்கூடிய இந்த தடுப்பு மருந்து அமெரிக்காவில் 68 லட்சம் பேருக்கு மேல் செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடுப்பூசி போட்டுக்கொண்ட 6 பெண்களுக்கு ரத்தம் உறைதல் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்த விசாரணை முடியும் வரை அந்நிறுவனத்தின் தடுப்பூசிக்கு தடை விதிக்க அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து வாரியம் அரசுக்கு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு எதிராக கண்டுபிடிக்கப்பட்ட கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பு மருந்துகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், அக்டோபர் மாதத்திற்குள் மேலும் 5 தடுப்பூசிகள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதில் ஜான்சன் அண்ட் ஜான்சன் தடுப்பூசியும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.