13 லட்சம் லிட்டர் அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு சீனா கண்டனம்
14 Apr,2021
ஜப்பான் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு சுனாமி பேரலையின் தாக்குதல் காரணமாக, புகுஷிமா அணு உலையில் கடும் சேதம் ஏற்பட்டது. இதனால் காற்றில் கதிர்வீச்சு பரவி விடாமல் தடுக்க, லட்சக்கணக்கான டன் தண்ணீரை பயன்படுத்தி அணு உலையின் வெப்பத்தையும் கதிர்வீச்சையும் குறைத்தனர்.
இதில் குறைவான கதீர்வீச்சு கொண்ட நீர் பசிபிக் பெருங்கடலுக்குள் சென்றது. அதிக கதீர்வீச்சு கொண்ட தண்ணீர் அணு உலை வளாகத்திலேயே தொட்டிகளில் சேமித்து வைக்கப்பட்டது. அப்படியாக இதுவரை 13 லட்சம் டன் தண்ணீர் அந்த வளாகத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில், சேமித்து வைக்கப்பட்டுள்ள புகுஷிமா உலையின் அணுக்கதிர் கழிவுநீரை பசிபிக் பெருங்கடலில் கலக்க முடிவு செய்துள்ளதாக ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. புகுஷிமா அணு உலையை மீண்டும் புதுப்பிக்க இந்த தண்ணீரை வெளியேற்ற வேண்டியது அவசியம் என்று ஜப்பான் பிரதமர் யோஷிஹைடே சுகா தெரிவித்துள்ளார்.
சேமித்து வைக்கப்பட்டுள்ள நீரில் உள்ள அதிகளவு கதிர்வீச்சு அகற்றப்பட்ட பிறகே கடலுக்குள் செலுத்தப்படும் என ஜப்பான் அரசு கூறினாலும், அதிலுள்ள ட்ரிட்டியத்தை முழுமையாக அகற்றுவதற்கான தொழில்நுட்பம் உலக நாடுகளிடம் தற்போது இல்லை என்று கூறப்படுகிறது. மேலும் திட்டமிட்டபடி இதனை செய்து முடிக்க குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் ஆகும் என ஜப்பான் அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், அணுக்கதிர் கழிவுநீரை கடலில் கலக்கும் ஜப்பான் அரசின் முடிவுக்கு அண்டை நாடான சீனா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சீன வெளியுறவுத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில், ஜப்பான் அரசின் இந்த முடிவு மிகவும் பொறுப்பற்ற தன்மை மற்றும் சர்வதேச பொதுமக்கள் உடல்நலம் மற்றும் அண்டை நாடுகளின் பாதுகாப்ப்பை இந்த நடவடிக்கை கடுமையாக பாதிக்கும். இந்த விவகாரம் தொடர்பாக உலக நாடுகளுடன் இணைந்து சீனா உன்னிப்பாக கவனித்து வருகிறது. இது தொடர்பாக மேலும் நடவடிக்கைகள் எடுக்க சீனாவுக்கு உரிமை உள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.