அமெரிக்காவில் கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொலை
13 Apr,2021
அமெரிக்காவின் மினசோட்டா மாகாணத்தில், மினியாபொலிஸ் நகருக்கு அருகில் உள்ள புரூக்ளின் சென்டர் பகுதியில், போக்குவரத்து விதிமுறைகளை மீறியதாக கூறி கார் ஒன்றை போலீசார் தடுத்து நிறுத்தினர். காரை ஓட்டி வந்த கறுப்பின இளைஞரான டான்ட் ரைட் என்பவரை போலீசார் கைது செய்ய முற்பட்டனர். ஆனால் டான்ட் ரைட் தான் எந்த தவறும் செய்யவில்லை என போலீசிடம் கூறிவிட்டு மீண்டும் காரில் ஏறி செல்ல முற்பட்டார். அப்போது ஏற்பட்ட கைகலப்பில் போலீஸ் அதிகாரி ஒருவர் அவரை துப்பாக்கியால் சுட்டார்.
துப்பாக்கி குண்டு காயத்துடன் டான்ட் ரைட் காரை சிறிது தூரம் ஓட்டிச் சென்றார். பின்னர் மற்றொரு கார் மீது அவரது கார் மோதி நின்றது. இதையடுத்து போலீசார் சென்று பார்த்தபோது டான்ட் ரைட் காருக்குள் பிணமாக கிடந்தார். மேலும் அவருடன் காரில் பயணித்த பெண்ணொருவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடினார். போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதனிடையே கருப்பின இளைஞர் போலீசாரால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் காட்டுத்தீ போல பரவியது. நூற்றுக்கணக்கான மக்கள் வீதிகளில் இறங்கி டான்ட் ரைட் மறைவுக்கு நீதி கேட்டு போராடத் தொடங்கினர். புரூக்ளின் சென்டர் நகரில் உள்ள போலீஸ் தலைமையகம் முன்பு திரண்ட போராட்டக்காரர்கள் டான்ட் ரைட் பெயரை முழக்கமிட்டதோடு, போலீசாருக்கு எதிராக கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
போலீசார் போராட்டக்காரர்களை விரட்டியடிக்க கண்ணீர் புகை குண்டுகளை வீசியதோடு ரப்பர் குண்டுகளால் சுட்டனர். இந்த வன்முறை புரூக்ளின் சென்டர் நகர் முழுவதும் பரவி ஆங்காங்கே போலீசாரும் போராட்டக்காரர்களும் கடுமையாக மோதிக்கொண்டனர்.
இதனால் அந்த நகரம் முழுவதும் போர்க்களமாக காட்சியளித்தது. மினசோட்டா மாகாண ஆளுனர் டிம் வால்ஸ், புரூக்ளின் சென்டர் நகரில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளார். அமெரிக்காவில் ஏற்கெனவே ஜார்ஜ்பிளாய்ட் கொல்லப்பட்ட இறுதிக்கட்ட வழக்கு விசாரணை மினசோட்டா மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், மற்றொரு கருப்பின இளைஞர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் அங்கு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஃபிரான்ஸ் தலைநகர் பாரிசில் மருத்துவமனை முன்பு மர்மநபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். பாரிசில் ஹெண்ட்ரி-டுனால்ட் மருத்துவமனை முன்பு துப்பாக்கியுடன் இருசக்கரவாகனத்தில் வந்த மர்மநபர் மருத்துவமனை முன் நின்றுகொண்டிருந்த ஒருவர் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த தாக்குதலை தடுக்கவந்த பெண் காவலாளி மீதும் அந்த நபர் துப்பாக்கியால் சுட்டார். இந்த தாக்குதலில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த பெண் காவலாளி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபரை போலீசார் தேடி வருகின்றனர்.