இஸ்ரேலை பழி வாங்குவோம்: ஈரான் அரசு
13 Apr,2021
, அதன் அணு உலையில் ஏற்பட்ட பாதிப்புக்கு இஸ்ரேல் தான் காரணம் என, குற்றம் சாட்டியுள்ளது.
மேற்கு ஆசியாவைச் சேர்ந்த ஈரானில், நடான்ஸ் என்ற இடத்தில், அணு உலை செயல்பட்டு வருகிறது. இங்கு, நேற்று முன்தினம், யுரேனியம் செறிவூட்டலுக்கான இயந்திரம் திடீரென சேதமடைந்தது.இதையடுத்து, மின்சாரம் துண்டிக்கப்பட்டு, அணு உலை இருளில் மூழ்கியது. ஒரு பிரிவில் திடீரென தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இதனால், ஈரான் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளது.'இஸ்ரேலின் உளவுப் பிரிவான, 'மொஸாட்' டின்கணினி நாசகர வேலைதான், அணு உலை சேதத்திற்கு காரணம்' என, ஈரான் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது.
''இஸ்ரேலுக்கு தகுந்த பதிலடி கொடுப்போம். பழிக்குப் பழி வாங்குவோம்,'' என, ஈரான், வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் சயீத் கதிப்சதே எச்சரித்து உள்ளார்.ஏற்கனவே, அணு ஆயுத ஒப்பந்தம் தொடர்பாக, இஸ்ரேல் - ஈரான் இடையே பனிப்போர் நீடித்து வருகிறது.இந்நிலையில், அணு உலையில் ஏற்பட்ட சேதம், இரு நாடுகளிடையேயான உறவில், மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த, 2010ல், நடான்ஸ் அணு உலை கணினியில், வைரஸ் புகுந்ததை அடுத்து, யுரேனியம் செறிவூட்டும் இயந்திரம் சேதமடைந்தது. இதற்கு, அமெரிக்கா - இஸ்ரேல் கூட்டு சதி தான் காரணம் என, ஈரான் குற்றம் சாட்டி இருந்தது. இதற்கிடையே, இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நெதன்யாகு, அமெரிக்க ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டினை சந்தித்து பேசினார். அணு உலை விவகாரம்குறித்து, நெதன்யாகு கூறும்போது, ''நாங்கள் என்ன செய்தோம் என்பதை கூறுவது கடினம்,'' என, தெரிவித்துள்ளார்.