போட்டி நிறுவனங்களை அழிக்க முயற்சிப்பதாக குற்றம் சாட்டி அலிபாபா நிறுவனத்துக்கு ரூ.20 ஆயிரம் கோடி அபராதம் விதித்து சீன அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.சீனாவைச் சேர்ந்த உலகின் முன்னணி மின்னணு வர்த்தக நிறுவனம் அலிபாபா. இதன் நிறுவனர் ஜாக் மா. ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்த இவர் கடந்த 1999-ம் ஆண்டு தனது நண்பர்களுடன் இணைந்து தொடங்கியதுதான் அலிபாபா என்ற மின்னணு வர்த்தக நிறுவனம்.
சீன மக்களின் வாங்கும் (ஷாப்பிங்) பழக்கத்தையே புரட்டிப்போட்ட அலிபாபா, இன்று 200-க்கு மேற்பட்ட நாடுகளில் செயல்பட்டு வருகிறது. பல நிறுவனங்களை ஜாக் மா நடத்தி வந்தாலும் அலிபாபாதான் அவருக்கு அடையாளம். மின்னணு வர்த்தகம் மட்டுமன்றி செயலிகள் உருவாக்கம், வங்கிகள், கிளவுட் கம்ப்யூட்டிங் உள்ளிட்ட துறைகளிலும் அலிபாபா ஈடுபட்டு வருகிறது.
இப்படி எல்லாம் நன்றாகப் போய்க்கொண்டிருந்த வேளையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அலிபாபா நிறுவனத்துக்கு சிக்கல் ஆரம்பித்தது. ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற அலிபாபா நிறுவனர் ஜாக் மா, சீனாவின் அதிகாரத்துவ அமைப்புகளை விமர்சித்தார். புதுமைகளை அவை தடுத்து நிறுத்துவதாகக் குற்றம்சாட்டினார்; சீன வங்கிகள் அடகுக் கடைகள்போல் செயல்படுவதாகச் சாடினார். ஜாக் மாவின் இந்தப் பேச்சு சீன அரசுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியது.
ஜாக் மாவின் விமர்சனத்துக்கு அடுத்த சில நாட்களில் அலிபாபா நிறுவனத்தின் தலைமையில் இயங்கும் ஆன்ட் நிறுவனம் பொதுப் பங்குகளை (ஐ.பி.ஓ.) வெளியிட தீர்மானித்து இருந்தது. ஆனால், விதிமுறையை பூர்த்தி செய்யவில்லை எனக் கூறி, அதனை வெளியிடுவதை தடுத்தது சீன அரசு.
ஆன்ட் நிறுவனம் வெளியிட இருந்த ஐ.பி.ஓ-வின் மதிப்பு ரூ.3,700 கோடி டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.2,73,800 கோடி) ஆகும்.
இதனால், அலிபாபா நிறுவனத்தின் சந்தை மதிப்பு இந்த ஆண்டு 30 பில்லியன் டாலர் அளவுக்கு சரிவை சந்தித்தது. இதேபோல் ஜாக் மாவின் சொத்து மதிப்பு 11 பில்லியன் டாலர் அளவுக்கு சரிந்தது.
இதனைத் தொடர்ந்து ஜாக் மா சுமார் 2 மாத காலங்களுக்கு வெளியுலகில் தலைகாட்டவில்லை. இது பல்வேறு யூகங்களுக்கு வழிவகுத்தது. எனினும் 2 மாதங்களுக்குப் பிறகு அவர் பொது நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
ஆனாலும் சீன அரசு அலிபாபா நிறுவனத்துக்கு எதிரான நடவடிக்கைகளை மேலும் கடுமையாக்கியது.
அலிபாபா நிறுவனம், தனது போட்டி நிறுவனங்களை அழித்து தன்னை மட்டுமே சந்தையில் நிலை நிறுத்திக் கொள்ள, முற்றொருமை நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றம் சாட்டி அந்த நிறுவனத்தின் மீது சீன அரசின் சந்தைகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம் (எஸ்.ஏ.எம்.ஆர்) கடந்த ஆண்டு டிசம்பரில் விசாரணையை தொடங்கியது.
அலிபாபாவின் ‘‘இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்’’ திட்டம் உள்பட நிறுவனத்தின் போட்டி எதிர்ப்பு தந்திரங்களை தீவிரமாக ஆராய்ந்து வருவதாக எஸ்.ஏ.எம்.ஆர். கூறியது.
வியாபாரிகளை, ஏதாவது ஒரு மின்னணு வர்த்தக நிறுவனத்தில் மட்டும் பிரத்யேகமாக பொருட்களை விற்க வைப்பதுதான் ‘‘இந்த இரண்டில் ஒன்றைத் தேர்வு செய்யுங்கள்’’ திட்டத்தின் நோக்கம்.
இந்த திட்டத்தின்படி, ஒரு வியாபாரி, மற்ற மின்னணு வர்த்தக நிறுவனங்களிடம் பொருட்களை விற்றால், அப்படி விற்கும் வியாபாரியின் பொருளைத் தேடி வரும் இணையத் தேடல்களை, மின்னணு வர்த்தக நிறுவனம் முடக்கிவிடும் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் அலிபாபா நிறுவனத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் அந்த நிறுவனம் போட்டி நிறுவனங்களை அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக சந்தைகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து சந்தை விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் அலிபாபா நிறுவனத்துக்கு 2.8 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.20 ஆயிரத்து 924 கோடி) அபராதம் விதித்து சந்தைகளுக்கான ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டது.
இந்த அபராதம் அலிபாபா நிறுவனத்தின் 2019-ம் ஆண்டின் மொத்த விற்பனையில் 4 சதவீதத்துக்கு சமமாக இருக்கும் என அந்த ஆணையம் தெரிவித்துள்ளது.