வாழ்வுக்கும் சாவுக்கும் இடையில் உள்ளோம். 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வரும், 19ம் தேதிக்குள் தடுப்பூசி வழங்கப்படும்' என, அமெரிக்க அதிபர், ஜோ பைடன் கூறிஉள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரசின் நான்காம் அலை பரவல் தற்போது உள்ளது. அங்கு, 3.08 கோடி பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. அதில், 5.56 லட்சம் பேர் உயிரிழந்து உள்ளனர்.'அதிபராக பதவியேற்ற 100 நாட்களில், 10 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்படும்' என, ஜோ பைடன் உறுதியளித்து இருந்தார்.
தற்போது, 75 நாட்களில், 15 கோடி பேருக்கு தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. வரும், மே, 1ம் தேதிக்குள் அனைவருக்கும் தடுப்பூசி வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், தடுப்பூசிகள் தயாரிக்கும் மையங்களுக்கு, ஜோ பைடன் பயணம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
கொரோனா வைரசால் அதிக பாதிப்பை, அதிக பலியை சந்தித்து விட்டோம். தற்போது நாம், வாழ்வுக்கும் சாவுக்கும் இடையே உள்ளோம். இன்னும் நாம் எல்லைக் கோட்டை நெருங்க வில்லை. அதனால் கைகளை அடிக்கடி கழுவுவது, முக கவசம் அணிவது, சமூக இடைவெளி பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.யார் யாருக்கு எப்போது தடுப்பூசி என்பதில் இனி எந்தக் குழப்பமும் இல்லை.
18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும், வரும், 19ம் தேதிக்குள் தடுப்பூசி வழங்கப்படும். அதற்கேற்ப பதிவு செய்து கொள்ளுங்கள்.இவ்வாறு, அவர் கூறினார்.
ஜோ பைடன் பூரிப்பு
தடுப்பூசி தயாரிக்கும் பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டபோது, இந்தியாவை பூர்வீகமாக உடைய, சவியா கான் என்ற பெண்ணை, ஜோ பைடன் சந்தித்தார்.அந்தப் பெண், ''நான் இந்தியாவைச் சேர்ந்தவர்,'' என, கூறியதும், ஜோ பைடன் பூரிப்படைந்தார். ''நான் பலமுறை இந்தியாவுக்கு சென்றுள்ளேன்,'' என, மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
அந்த பெண், தன்னுடைய குடும்பம் குறித்தும், அமெரிக்காவில் நீண்ட காலமாக இருப்பதில் பெருமைபடுவதாகவும் குறிப்பிட்டார்.''நீங்கள் தான் அமெரிக்கா. வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களால் உருவானது தான் அமெரிக்கா. நம்முடைய துணை அதிபர் கமலா ஹாரிசும், உங்களைப் போலவே, இந்தியாவை பூர்வீகமாக உடையவர்,'' என, ஜோ பைடன் குறிப்பிட்டார்