பாட்டில்களில் ஊழியர்கள் சிறுநீர் கழித்த விவகாரம் - மன்னிப்பு கோரிய அமேசான்
05 Apr,2021
அமேசான் நிறுவனத்தில் ஓட்டுநர்களாக பணிபுரியும் ஊழியர்கள் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கவேண்டிய சூழல் உருவானது செய்தியான நிலையில் அமேசான் நிறுவனம் மன்னிப்பு கோரியுள்ளது.
உலக அளவில் ஆன்லைன் வர்த்தகத்தில் அமேசான் நிறுவனம் முன்னணி நிறுவனமாக இருந்துவருகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த இந்த நிறுவனம் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் தொழில் செய்துவருகிறது. இந்தநிலையில், அமெரிக்காவின் விஸ்கான்சின் மாகாணத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் மார்க் போகேன் அமேசான் நிறுவனம் மீது கடந்த வாரம் குற்றம் சாட்டினார். அவருடைய ட்விட்டர் பதிவில், ‘ஊழியர்களுக்கு ஒரு மணி நேரத்துக்கு 15 அமெரிக்க டாலர் ஊதியம் கொடுப்பதால் மட்டும் உங்கள் நிறுவனம் சிறந்த பணியிடமாகிவிடாது. ஊழியர்களை பிளாஸ்டிக் பாட்டில்களில் சிறுநீர் கழிக்கவைப்பது முறையற்றது’ என்று குறிப்பிட்டிருந்தார்.
உடனடியாக அதற்கு பதிலளித்த அமேசான், ‘பாட்டில்களில் சிறுநீர் கழிக்கும் விவகாரத்தை நீங்கள் உண்மையென்று நம்புகிறீர்களா? அது ஒருவேளை உண்மையாக இருந்தால் யாரும் எங்களுக்காக வேலை செய்ய மாட்டார்கள்?’ என்று ட்விட்டரில் பதிலளித்திருந்தது. ஆனால், அதனைத் தொடர்ந்து, அமேசான் ஊழியர்கள் பாட்டிலில் சிறுநீர் கழிக்கிறார்கள் என்று பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியாகியது. இந்தநிலையில், இன்டர்செப்ட் எனும் இணைய ஊடகம், ‘ஓட்டுநர்கள் பாட்டிலில் சிறுநீர் கழிப்பது அமேசான் நிறுவனத்தின் மூத்த ஊழியர்களுகும் தெரியும்’ என்று செய்தி வெளியிட்டது. இந்தநிலையில், அமேசான் நிறுவனம் எம்.பி போகேனிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
இதுகுறித்து அமேசானின் ட்விட்டர் பதிவில், ‘ஓட்டுநர்களுக்கு கழிவறைகளைக் கண்டடைவதில் சிரமம் இருப்பது எங்களுக்குத் தெரியும். கிராமப் பகுதிகள் மற்றும் போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் கழிவறைகளைக் கண்டறிவது கடினமான விஷயம். குறிப்பாக, கொரோனா காலத்தில் பொதுக் கழிப்பிடங்கள் மூடப்பட்டு இருந்தன. இந்தப் பிரச்னை நீண்ட காலமாக உள்ளது. விரைவில் இதனை சரி செய்ய விரும்புகிறோம்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு பதிலளித்துள்ள எம்.பி பேகேன், ‘இது என்னுடைய பிரச்னை அல்ல. உங்களுடைய ஊழியர்களின் பிரச்னை. போதுமான மரியாதையுடன் அவர்களை கையாளவில்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.