ஹிந்து கோவில் சேதம் பாக்.,கில் அட்டூழியம்
30 Mar,2021
பாகிஸ்தானின் ராவல்பிண்டியில், 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஹிந்து கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள், கதவுகள், படிக்கட்டுகளை சேதப்படுத்தி உள்ளனர்.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில், சிறுபான்மையினரான ஹிந்துக்களின் வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல், தொடர்கதையாகி வருகிறது.கைபர் -பக்துன்க்வா மாகாணத்தின் காரக் மாவட்டத்தில் உள்ள கோவிலை, கடந்தாண்டு இறுதியில், ஒரு கும்பல் சேதப்படுத்தியது.இந்நிலையில், ராவல்பிண்டி நகரின் புராண கிலா பகுதியில், 100 ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஹிந்து கோவிலின் புனரமைப்பு பணிகள், கடந்த வாரம் துவங்கின.இதற்கு முன், கோவிலுக்கு முன் இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் முழுமையாக அகற்றப்பட்டன.
இதனால் ஆத்திரம் அடைந்த ஒரு கும்பல், இரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்து, படிக்கட்டிகள், கதவுகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியது.தகவல் அறிந்த போலீசார், வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடுவதுடன், கோவிலுக்கு பாதுகாப்பும் வழங்கி வருகின்றனர்.இது குறித்து, அதிகாரிகள் கூறும்போது, 'கோவில் முன் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால், இந்த சம்பவம் நடந்ததாக கருதுகிறோம்' என்றனர்.