ஈரான் உட்பட 13 நாடுகளுக்கு ஐரோப்பிய ஒன்றியம் விடுத்த எச்சரிக்கை!
29 Mar,2021
நாடுகடத்தப்பட்டவர்களை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து திரும்பப் பெற தயக்கம் காட்டும் 13 நாடுகள் விசா கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது என்று ஜேர்மன் செய்தித்தாளான Welt am Sonntag தெரிவித்துள்ளது. ஜேர்மன் செய்தித்தாள் படி, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தங்கள் சொந்த குடிமக்களை திரும்பப் பெறுவதை முறைப்படி தடுத்து வரும் மொத்தம் 39 நாடுகளை ஐரோப்பிய ஆணையம் அடையாளம் கண்டுள்ளது.
இதில், 13 நாடுகள் மிக மோசமான திருப்தியற்ற பட்டியலில் இடம்பெற்றுள்ளது.
ஈராக், ஈரான், லிபியா, செனகல், சோமாலியா, மாலி, கேமரூன், காங்கோ குடியரசு, எகிப்து, எரித்திரியா, எத்தியோப்பியா மற்றும் கினியா-பிசாவ் ஆகிய 13 நாடுகள் மிக மோசமான திருப்தியற்ற பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்த நாடுகள், தங்கள் குடிமக்களை திரும்பப் பெறுவதற்கு ஒத்துழைக்காவிட்டால் ஐரோப்பிய ஒன்றியத்தின் விசா கட்டுப்பாடுகளை எதிர்கொள்ளும் என கூறப்படுகிறது.
நாடுகடத்தப்பட்டவர்களை திரும்பப் பெறும் விஷயத்தில் ஒத்துழைப்பை மேம்படுத்த மேற்குறிப்பிட்ட நாடுகளுடன் பேச்சுவார்த்தையை தொடங்குவதே ஐரோப்பிய ஆணையத்தின் தற்போதைய குறிக்கோளாக உள்ளது.
ஆனால் பேச்சுவார்த்தையால் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்றால், கோடைகாலத்தில் தொடங்கி, ஐரோப்பிய ஒன்றியம் இந்த நாடுகளிலிருந்து விசா விண்ணப்பங்களுக்கான செயலாக்க நேரத்தை நீட்டிக்கலாம் அல்லது அவர்களுக்கு விசா அனுமதி காலத்தை குறைக்கலாம், விசா கட்டணத்தை அதிகரிக்கலாம் என Welt am Sonntag தெரிவித்துள்ளது.