40 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் அழைப்பு
27 Mar,2021
பருவநிலை மாறுபாடு பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக விவாதிக்க, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட, 40 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்துஉள்ளார்.
ஒப்பந்தம்
உலக நாடுகள் அனைத்துக்கும் உள்ள மிகப் பெரிய பிரச்னைகளில் ஒன்று, பருவ நிலை மாறுபாடு. இந்தப் பிரச்னையை எதிர்கொள்ள, 2016ம் ஆண்டில், பிரான்ஸ்சின் பாரிஸ் நகரில் ஒப்பந்தம் செய்யப்பட்டது.அதில், 195 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. சுற்றுச்சூழலுக்கு ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்காக, இந்த ஒப்பந்தம் செய்யப்பட்டது.ஐ.நா., பருவநிலை மாறுபாடு மாநாடு, வரும் நவம்பரில் நடக்க உள்ளது.
நேரடியாக ஒளிபரப்பு
இந்நிலையில், அதற்கு முன்னோட்டமாக, 40 நாடுகளின் தலைவர்கள் மாநாட்டுக்கு, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அழைப்பு விடுத்து உள்ளார்.ஏப்., 22 - 23ம் தேதிகளில், 'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் இந்த மாநாடு நடக்க உள்ளது. இதில் பங்கேற்க, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்களுக்கு, அமெரிக்கா அழைப்பு விடுத்துஉள்ளது. இந்த மாநாட்டில் நடக்கும் விவாதங்கள், பொதுமக்கள் பார்க்கும் வகையில், நேரடியாக ஒளிபரப்பவும் திட்டமிடப்பட்டுள்ளது.
சீன அதிபர் ஷீ ஜிங்பிங்; ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், ஜப்பான் பிரதமர் யோஷிஹைட் சுகா, பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சனாரோ; பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் உள்ளிட்டோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுஉள்ளது.