துபாய் துணை ஆட்சியாளர் ஷேக் ஹம்தான் காலமானார்
24 Mar,2021
துபாய் ஆட்சியாளர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூமின் சகோதரரும், துபாயின் துணை ஆட்சியாளருமான ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் காலமானார். அவருக்கு வயது 75. கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த ஷேக் ஹம்தான், சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இந்த செய்தியை துபாய் ஆட்சியாளரும், அவரது சகோதரருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது டுவிட்டர் பக்கத்தில் உறுதிப்படுத்தியுள்ளார்.
ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் துபாயின் துணை ஆட்சியாளராக மட்டுமல்லாது, ஐக்கிய அரபு அமீரகத்தின் நிதி மற்றும் கைத்தொழில் அமைச்சராகவும் பணியாற்றி வந்தார். கடந்த 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 9-ஆம் தேதி ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் அமைச்சரவை அமைக்கப்பட்டதிலிருந்து அதன் நிதி அமைச்சராக பதவி வகித்து வந்துள்ளார்.
ஷேக் ஹம்தான் மறைவையொட்டி, துபாயில் 10 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 10 நாட்களும் துபாயில் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். 3 நாட்களுக்கு அரசு அலுவலகங்கள் மூடப்படும். கொரோனா காரணமாக இறுதிச் சடங்கில் முக்கிய குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பங்கேற்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.