சவுதி அரேபியாவில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது ஆளில்லா விமான தாக்குதல்
20 Mar,2021
ஏமனில் அதிபர் மன்சூர் ஹாதி அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சி படைக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
இந்த போரில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் அதிபர் மன்சூர் ஹாதிக்கு ஆதரவாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது தரை வழியாகவும், வான் வழியாகவும் தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனால் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சவுதி அரேபியாவின் நகரங்கள் மீது ஏவுகணைகளை வீசியும், ஆளில்லா விமானங்கள் மூலமும் தாக்குதல் நடத்துவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
இந்த நிலையில் சவுதி அரேபியாவின் தலைநகர் ரியாத்தில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் நேற்று முன்தினம் ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.
இதில் எண்ணெய் ஆலையின் ஒரு பகுதியில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்ததாக அந்த நாட்டு அரசு செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், கச்சா எண்ணெய் உற்பத்தியில் எந்த வித பாதிப்பும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியா அரசு தனது அறிக்கையில் இந்த தாக்குதலுக்கு ஹவுதி கிளர்ச்சியாளர்களை குற்றம் சாட்டவில்லை.
அதேசமயம் ரியாத்தில் உள்ள ஒரு எண்ணெய் ஆலை மீது 6 ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுகுறித்து சவுதி அரேபியா எந்த விளக்கமும் அளிக்கவில்லை. கடந்த 2019-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் ரியாத் அருகே உள்ள அப்காய்க் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மற்றும் குராய்ஸ் என்ற இடத்தில் உள்ள எண்ணெய் வயல் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் 50 லட்சம் பேரல்கள் எண்ணெய் எரிந்து போனதும், இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை 10 சதவீதத்துக்கும் மேல் அதிகரித்ததும் நினைவுகூரத்தக்கது.