தனது குடிமகன் ஒருவர் மலேசியாவில் இருந்து அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதுதான் வட கொரியாவை இந்தளவு கொந்தளிக்க வைத்துள்ளது.
சரி... நாடு கடத்தப்பட்ட வட கொரிய குடிமகன் யார்? அவர் அப்படி என்ன செய்து விட்டார்?
இரு நாடுகளுக்கு இடையேயான அண்மைய கசப்புணர்வுக்கு வித்திட்ட அந்நபரின் பெயர் முன் சோல் மியோங் (Mun Chol Myong). கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக மலேசியாவில் வசித்து வந்தவர்.
2019ஆம் ஆண்டு மலேசிய காவல்துறை அவரைக் கைது செய்தது. முன்னதாக முன் சோல் மியோங் பண மோசடியில் ஈடுபட்டதாகவும், வட கொரியாவுக்கு கப்பல் மூலம் சட்ட விரோதமாக பொருட்களை அனுப்ப போலி ஆவணங்களைப் பயன்படுத்தியதாகவும் அமெரிக்கா குற்றம்சாட்டி இருந்தது.
ஐ.நா சபை தடைகளை மீறி சிங்கப்பூரில் இருந்து ஆடம்பரப் பொருட்களை வட கொரியாவுக்கு அனுப்பினார் என்பதுதான், முன் சோல் மியோங் மீது அமெரிக்கா முன்வைத்த குற்றச்சாட்டு.
மேலும் இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் முன் சோல் மியோங்கை நாடு கடத்த வேண்டும் என்றும் மலேசிய அரசைக் கேட்டுக் கொண்டது. ஆனால் தன் மீதான குற்றச்சாட்டுகளை முன் சோல் மியோங் திட்டவட்டமாக மறுத்தார்.
அரசியல் காரணங்களுக்காக அமெரிக்கா தன் மீது பழி சுமத்துவதாகவும் அவர் வாதிட்டார்.
மலேசிய நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில், முன் சோல் மியோங்கை நாடு கடத்த அனுமதி வழங்கி உத்தரவிடப்பட்டது. கடந்த மார்ச் 9ஆம் தேதி வெளியான தீர்ப்பின் அடிப்படையில் அவர் நாடு கடத்தப்பட்டதாகத் தெரிகிறது.
வட கொரிய தலைமையால் இதை சற்றும் ஏற்க முடியவில்லை. இதையடுத்து தனது குடிமகன் அமெரிக்காவுக்கு நாடு கடத்தப்பட்டதை மிக இழிவான செயல் என்றும் மன்னிக்க முடியாத கடுங்குற்றம் என்றும் வட கொரிய வெளியுறவு அமைச்சு காட்டத்துடன் வர்ணித்துள்ளது.
மேலும் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச சட்டங்களுக்கு எதிரான அமெரிக்காவின் செயல்பாடுகளுக்கு தமது குடிமகன் பலிகொடுக்கப்பட்டிருப்பதாக வட கொரியா சாடியுள்ளது.
இரு நாடுகளின் இறையாண்மை மீதான பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் அமைந்த இரு தரப்பு உறவுகளை மலேசியாவின் அண்மைய செயல்பாடு முற்றிலுமாக அழித்து விட்டது என வட கொரிய வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.
இந்த "நாடு கடத்தல்" நடவடிக்கையின் பின்னணியில் இருந்து இயங்குவது அமெரிக்காதான் என்றும் முக்கிய குற்றவாளியான அந்நாடு இதற்குரிய விலையைக் கொடுக்க நேரிடும் என்றும் வட கொரியா எச்சரித்துள்ளது.
இது அமெரிக்காவுக்கு முன்கூட்டியே விடுக்கப்படும் எச்சரிக்கை என்றும், தனது முக்கிய எதிரியான அமெரிக்காவின் சதி வேலை காரணமாக தனது குடிமகன் சிக்கியுள்ளதாகவும் வட கொரியா கூறுகிறது.
இதையடுத்து கோலாலம்பூரில் உள்ள தூதரகத்தில் பணியாற்றும் தமது ஊழியர்கள் அனைவரும் அடுத்த 48 மணி நேரத்தில் மலேசியாவை விட்டு வெளியேற வேண்டும் என வட கொரியா உத்தரவிட்டுள்ளது.
இது ஆக்கபூர்வமற்ற செயல்பாடு எனக் குறிப்பிட்டுள்ள மலேசிய அரசு, வட கொரியாவின் ப்யொங்யாங்கில் உள்ள தனது தூதரகத்தை மூடுவதாக அறிவித்திருக்கிறது.
மலேசியா, வட கொரியா இடையே நெருக்கமான உறவு நீடித்து வந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரியில் வட கொரிய தலைவர் கிம் ஜோங் வுன்னின் ஒன்றுவிட்ட சகோதரர் Kim Jong Nam கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.
இந்த மரணம் தொடர்பாக பல்வேறு முரண்பட்ட தகவல்கள் அடுத்தடுத்து வெளியாகின. இதனால் இருதரப்பு உறவுகள் பாதிக்கப்பட்டது.
Kim Jong Nam கொலையில் வட கொரியா சம்பந்தப்பட்டு இருப்பதாக மலேசிய அதிகாரிகள் எந்தவொரு தருணத்திலும் வெளிப்படையாக குற்றம்சாட்டவில்லை. எனினும் இது தொடர்பான வழக்கு விசாரணையின் போது வட கொரியாவுக்கு கொலையில் பங்கு இருப்பதாக சந்தேகம் எழுகிறது என அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் குறிப்பிட்டனர்.
இரு தரப்புக்கும் அச்சமயம் ஏற்பட்ட பிணக்கையடுத்து வட கொரியர்கள் மலேசியாவுக்கு விசா இல்லாமல் வந்து செல்வதற்கான அனுமதியை மலேசியா ரத்து செய்தது.
இதனால் அதிருப்தி அடைந்த வட கொரிய தலைமை, தங்கள் நாட்டில் இருந்த மலேசிய தூதரக அதிகாரிகள் மூன்று பேரையும் அவர்களின் குடும்பத்தார் ஆறு பேரையும் நாட்டை விட்டு வெளியேற தடை விதித்தது.
Kim Jong Nam இன் உடலை வட கொரியாவுக்கு அனுப்பிய பின்னர் மலேசியாவில் உள்ள வட கொரிய குடிமக்கள் வெளியேறவும் அனுமதித்த பிறகே மலேசியர்கள் தங்கள் நாட்டை விட்டு கிளம்ப வட கொரியா அனுமதித்தது.
இந்நிலையில் வட கொரிய குடிமகன் நாடு கடத்தப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் கருத்து வேறுபாடுகளுக்கு வித்திட்டுள்ளது.
இதற்கிடையே வட கொரியா தொடர்பான அமெரிக்காவின் கொள்கை குறித்து அந்நாட்டின் புதிய அதிபர் ஜோ பைடன், நட்பு நாடுகளுடன் கலந்தாலோசித்து அடுத்த சில வாரங்களில் முடிவெடுப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.