சீனா, ஹாங்காங் அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதார தடை
18 Mar,2021
சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த, மேலும், 24 அதிகாரிகள் மீது, பொருளாதார தடை விதித்து, அமெரிக்கா நேற்று உத்தரவிட்டது.உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளான அமெரிக்கா மற்றும் சீனா இடையே, கடுமையான மோதல் நிலவுகிறது. இரு நாடுகளின் உறவும், சுமுகமான நிலையில் இல்லை.சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கில், சர்ச்சைக்குரிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை, சீனா, கடந்த ஆண்டு அமல்படுத்தியது. இதற்கு அமெரிக்கா, கடும் கண்டனம் தெரிவித்தது.இந்த விவகாரம் தொடர்பாக ஹாங்காங் நிர்வாக தலைவர் கேரி லாம் உட்பட, சீனா மற்றும் ஹாங்காங் அதிகாரிகள், 11 பேர் மீது, அமெரிக்கா, கடந்த ஆண்டு பொருளாதார தடை விதித்தது. பொருளாதார தடை விதிக்கப்படும் அதிகாரிகள், அமெரிக்காவுக்கு பயணம் செய்ய தடை விதிக்கப்படும், அமெரிக்க நிதி நிறுவனங்களுடனான, அவர்களது வர்த்தக உறவு தடை செய்யப்படும்.இந்நிலையில், ஹாங்காங்கின் தேர்தல் சட்டங்களில், பல்வேறு மாற்றங்களை, சீனா, கடந்த வாரம் அறிவித்தது. இந்த மாற்றங்கள், ஹாங்காங் பார்லி.,யில், தங்களுக்கு வேண்டிய நபர்களை நியமித்துக் கொள்ள, சீனாவுக்கு அதிகாரம் வழங்குகிறது.இதன் வாயிலாக, மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் குறைந்து, சீன அரசுக்கு விசுவாசமாக இருப்பவர்களே, ஹாங்காங் பார்லி.,யில் இடம் பெற முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது.இதற்கு கண்டனம் தெரிவித்த அமெரிக்கா, சீனா மற்றும் ஹாங்காங்கைச் சேர்ந்த, 24 அதிகாரிகள் மீது, பொருளாதார தடை விதித்து, நேற்று உத்தரவிட்டது.இந்த உத்தரவை, அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆன்டனி பிளின்கன் மற்றும் ராணுவ அமைச்சர் லாயிட் ஆஸ்டின் ஆகியோர் பிறப்பித்தனர்.