புடினை கொலையாளி என்ற பைடன்; தூதரை அழைத்த ரஷ்யா
18 Mar,2021
ரஷ்ய அதிபர் புடினை கொலையாளி என்றும், அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதற்கு உரிய விலை கொடுக்க போகிறார் என்றும் பைடன் விமர்சித்த மறுநாள், அமெரிக்காவுக்கான தங்கள் தூதரை ரஷ்யா அழைத்துள்ளது.
நவம்பர் 2020-ல் அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. அதில் குடியரசு கட்சியின் வேட்பாளர் ஜோ பைடனின் செல்வாக்கை குறைக்கவும், டிரம்பின் செல்வாக்கை அதிகரிக்கவும் ரஷ்யா முயன்றதாக அமெரிக்க உளவுத்துறை அறிக்கை அளித்துள்ளது.
இத்திட்டம் அதிபர் புடினின் ஒப்புதலுடன் தான் நடந்தேறியிருக்கும் என அதில் தெரிவித்தனர். இது குறித்து செய்தி சேனல் ஒன்றுக்கு அமெரிக்க அதிபர் அளித்த பேட்டியில் தேர்தல் தலையீட்டிற்கு அவர் உரிய விலை கொடுப்பார் என்றார்.
ரஷ்யாவின் எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவல்னி மற்றும் பிற எதிர்ப்பாளர்களுக்கு புடின் விஷம் தந்து கொல்ல முயன்றதாக குற்றச்சாட்டு உள்ளது. இதனை குறிப்பிட்டு, அவரை கொலையாளி என நினைக்கிறீர்களா என்று செய்தியாளர் கேள்வி எழுப்பினார். அதற்கு பைடன் ஆம் அப்படி தான் நினைக்கிறேன் என்றார். இது உலக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக நவல்னிக்கு விஷம் தந்த குற்றத்திற்காக ரஷ்யாவுக்கான ஏற்றுமதிக்கு கடும் கட்டுப்பாடுகளை விதித்தது அமெரிக்கா.
இந்நிலையில் வாஷிங்டனில் உள்ள ரஷ்ய தூதர் அனடோலி அண்டனோவை மாஸ்கோவிற்கு அழைத்துள்ளனர். தற்போதைய சூழலில் அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து ஆய்வு செய்ய அவரை அழைத்துள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சகம் கூறியுள்ளது.