அமெரிக்காவுடன் பேச்சுக்கு இடமில்லை- வடகொரியா
18 Mar,2021
அமெரிக்காவின் பேச்சுவார்த்தைக்கான அனைத்து முயற்சிகளையும் புறக்கணிப்பதாக வட கொரியா அறிவித்துள்ளது.
அமெரிக்கா விரோதக் கொள்கையைக் கொண்டுள்ளதாகவும் வொஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் எந்தவொரு தொடர்பும் அல்லது உரையாடலும் இருக்க முடியாது என்றும் வட கொரியாவின் முதல் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சோன் ஹுய் தெரிவித்துள்ளார்.
கொரிய மத்திய செய்தி நிறுவனத்தினால் இன்று (வியாழக்கிழமை) இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
வடகொரியாவுடன் தொடர்பை வலுப்படுத்தி பேச்சுவார்த்தையை முன்னெடுப்பதற்காக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆன்ரனி பிளிங்கன் சில இராஜதந்திர முயற்சிகளை மேற்கொண்டார்.
இந்நிலையில், இதுகுறித்து வட கொரியாவின் முதல் வெளியுறவுத் துணை அமைச்சர் சோ சோன் ஹுய் தெரிவிக்கையில், “அமெரிக்கா தனது விரோதக் கொள்கையில் இருந்து திரும்பாவிட்டால் எதிர்காலத்தில் அமெரிக்காவின் அத்தகைய பேச்சுவார்த்தை முயற்சியை நாங்கள் புறக்கணிப்போம்.
அமெரிக்காவின் புதிய ஆட்சியானது, வட கொரியாவின் அச்சுறுத்தல் என்ற ஒரு பைத்தியக்காரத்தனமான கோட்பாட்டையும், முழுமையான அணுசக்தி மயமாக்கலை வடகொரியா மேற்கொள்கிறது என்ற ஆதாரமற்ற சொல்லாடல்களையும் மட்டுமே முன்வைக்கிறது.
பைடனின் நிர்வாகம் பெப்ரவரியில் எம்முடன் தொடர்பை ஏற்படுத்தத் தொடங்கியது. பின்னர் மூன்றாம் நாடு வழியாக பல மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புகள் மற்றும் செய்திகளை அனுப்பியுள்ளது. இவ்வாறு தொடர்புக்கான முயற்சிகள் பொதுக் கருத்தை வளர்ப்பதற்கான மலிவான தந்திரமே” என சோ தெரிவித்துள்ளார்.