வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் முயற்சிக்கு பதில் இல்லை – அமெரிக்கா
14 Mar,2021
வட கொரியாவைத் தொடர்பு கொள்ளும் அமெரிக்காவின் முயற்சிக்கு பியோங்யாங் இதுவரை பதிலளிக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த மாத நடுப்பகுதியிலிருந்து இராஜதந்திர முறையில் வட கொரியாவைத் தொடர்பு கொள்ள மேற்கொள்ளப்படும் முயற்சிக்கு உரிய பதில் கிடைக்கவில்லை என ஜோ பைடன் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
முயற்சி தகுந்த பலனைத் தராவிட்டாலும், வட கொரியாவைத் தொடர்பு கொள்ள முயன்றது குறித்து முதன்முறையாக வொஷிங்டன் தகவல் வெளியிட்டுள்ளது.
பியோயாங் உரிய பதில் வழங்கவில்லை என்பதால், வட கொரியாவின் அணுவாயுத மிரட்டல், ஏவுகணைத் திட்டங்கள் போன்றவற்றை ஜோ பைடன் நிர்வாகம் எவ்வாறு கையாளப் போகிறது என்பது குறித்த கவலை தற்போது எழுந்துள்ளது.
அமெரிக்க இராஜாங்க அமைச்சர் அண்டனி பிலின்கென், தற்காப்பு அமைச்சர் லோய்ட் ஒஸ்டின் ஆகியோரின் தென்கிழக்காசியாப் பயணம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. குறித்த இருவரும் ஜப்பானுடனும், தென் கொரியாவுடனும் ஆலோசனை நடத்தவுள்ளனர்.
வட கொரியா, எதிர்காலத்தில் அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா என்பது சந்தேகமே என கூறப்படுகின்றது.
குறித்த விவகாரத்தில் அமெரிக்கா எத்தகைய உத்தியைக் கையாளப்போகின்றது என்பது குறித்து தெளிவாகத் தெரியவில்லை எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.