ஈராக்கில் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு உத்தரவு நீடிப்பு!
09 Mar,2021
ஈராக்கில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்ந்து அதிகரித்ததன் காரணமாக ஈராக் அதிகாரிகள் திங்களன்று பகுதி மற்றும் முழு ஊரடங்கு உத்தரவை இரண்டு வாரங்களுக்கு நீடித்தனர்.
இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் மார்ச் 22ஆம் திகதி வரை அடுத்த இரண்டு வாரங்களுக்கு பொதுமுடக்கம் அறிவித்துள்ளது.
வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாள்களில் இரவு 8.00 மணி முதல் மறுநாள் காலை 5.00 மணி வரை ஊடரங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் தொற்றுநோயியல் நிலைமை கொவிட்-19 நோய்த்தொற்றுகள் தொடர்ந்து அதிகரிப்பதைக் குறிக்கிறது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட்-19 பரவுவதைக் கட்டுப்படுத்த சீனாவின் சினோபார்ம் மற்றும் பிரிட்டனின் அஸ்ட்ராஸெனெகா தடுப்பூசிகளை அவசரமாகப் பயன்படுத்துவதற்கு ஈராக் தேசிய மருந்துகள் வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.