தென்ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்பனை
08 Mar,2021
ஆப்பிரிக்க நாடுகளில் கொரோனா வைரசால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்ட முதல் நாடாக தென் ஆப்பிரிக்கா உள்ளது. அங்கு 15 லட்சத்துக்கும் அதிகமானோரை தாக்கியுள்ள கொரோனா வைரஸ், 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களையும் பறித்துள்ளது.
வைரஸ் பரவும் அதே வேகத்தில் அங்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் மும்முரமாக நடந்து வருகிறது. அமெரிக்காவின் ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனம் தயாரித்துள்ள தடுப்பூசி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்காவில் போலி கொரோனா தடுப்பூசிகள் அதிக அளவில் வலம் வருவதாகவும் எனவே மக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் எனவும் தென் ஆப்பிரிக்காவின் தேசிய போலீஸ் ஆணையம் எச்சரித்துள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தேசிய போலீஸ் படை நடத்திய அதிரடி தேடுதல் வேட்டையில் வடக்கு மாகாணம் குவாடெங்கில் உள்ள ஒரு கிடங்கிலிருந்து 4 லட்சம் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ 2 கோடியே 92 லட்சம்) மதிப்புடைய போலி கொரோனா தடுப்பூசிகள் மற்றும் முக கவசங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும், கடத்தல்காரர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தேசிய போலீஸ் ஆணையம் தற்போது தெரிவித்துள்ளது. அதேசமயம் நாட்டில் இன்னமும் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதாக அந்த ஆணையம் எச்சரித்துள்ளது. இணையம் வழியாகவும் கள்ளச் சந்தையிலும் போலி கொரோனா தடுப்பூசிகள் விற்கப்படுவதாகவும் எனவே மக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.