இந்திய பயணியால் இடையூறு; ஏர் பிரான்ஸ் விமானம் அவசரமாக தரையிறக்கம்
07 Mar,2021
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இருந்து புதுடெல்லிக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில், இந்திய பயணி இடையூறு ஏற்படுத்தியதால் விமானம் அவசர அவசரமாக பல்கேரியாவில் உள்ள சோஃபியா விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது. உள்ளூர் நேரப்படி நேற்று மாலை விமானம் புறப்பட்டதும், இந்தியாவை சேர்ந்த பயணி ஒருவர், சக பயணிகளுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
விமான உதவியாளர்களுடன் கைகலப்பிலும் ஈடுபட்டு ரகளை செய்துள்ளார். காக்பிட் கதவையும் வேகமாக தட்டியுள்ளார். விமான பயணியின் ஆக்ரோஷமாக நடவடிக்கையால் அதிர்ச்சி அடைந்த விமான சிப்பந்திகள், விமானத்தை அவசர தரையிறக்க அனுமதி கேட்டனர். இதன்படி, பல்கேரியாவில் உள்ள சோஃபியா விமான நிலையத்தில் விமானம் தரையிறக்கப்பட்டது. விமானத்தில் ரகளையில் ஈடுபட்ட பயணி இறக்கிவிடப்பட்ட பின் விமானம் மீண்டும் புறப்பட்டு டெல்லி வந்து சேர்ந்தது.
விமானத்தில் இடையூறு செய்த பயணியின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் வெளியிடப்படவில்லை. அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபணம் செய்யப்பட்டால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும் எனத்தெரிகிறது. பயணியின் மூர்க்கத்தனமான நடவடிக்கைக்கான காரணங்கள் மற்றும் அவரது உண்மையான நோக்கங்கள் பற்றி விசாரித்து வருவதாக பல்கேரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.