நைஜீரியாவில் கடத்தப்பட்ட 279 மாணவியர் விடுதலை
03 Mar,2021
நைஜீரியாவில், பயங்கரவாத அமைப்பினரால் கடத்தப்பட்ட, 279 பள்ளி மாணவியர் விடுவிக்கப்பட்டு உள்ளனர்.
மேற்கு ஆப்ரிக்க நாடான நைஜீரியாவில், பள்ளி மாணவ, மாணவியரை கடத்தும் சம்பவங்கள், சமீப காலமாக அதிகரித்து வருகின்றன.இங்குள்ள பயங்கரவாதிகள், பணத்துக்காகவும், சிறைகளில் உள்ள தங்கள் அமைப்பினரை விடுவிக்க வலியுறுத்தியும், கடத்தல் சம்பவங்களை தொடர்கின்றனர்.கடந்த வாரம் ஜம்பாரா மாகாணத்தின் ஜங்கேபே நகரில் உள்ள அரசு உறைவிட பள்ளிக்குள் துப்பாக்கிகளுடன் புகுந்த பயங்கரவாதிகள், 10 வயதிற்க்கு மேற்பட்ட, 279 மாணவியரை கடத்தினர்.அவர்களை மீட்க, போலீஸ் மற்றும் ராணுவத்தினர் இணைந்து, தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து அம்மாகாண கவர்னர் பெல்லோ மாதவல்லே கூறியுள்ளதாவது:கடந்த வாரம் கடத்தப்பட்ட, 279 மாணவியரும் விடுவிக்கப்பட்டு உள்ளனர். இந்த அறிவிப்பை வெளியிடுவதில், மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் குழந்தைகள், இப்போது பாதுகாப்பாக உள்ளனர்; இந்த மகிழ்ச்சியை, நாட்டு மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.