இஸ்ரேல் கப்பல் மீதான தாக்குதலின் பின்னணியில் ஈரான்: இஸ்ரேல் பிரதமர் குற்றச்சாட்டு!
01 Mar,2021
ஓமான் வளைகுடாவில் இஸ்ரேலுக்கு சொந்தமான கப்பல் மீது கடந்த வாரம் நடத்தப்பட்ட தாக்குலுக்கு பின்னால் ஈரான் இருப்பதாக இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்ரேலிய பொது ஒளிபரப்பு நிறுவனமான கானுக்கு இன்று (திங்கட்கிழமை) வழங்கிய நேர்காணலில் நெதன்யாகு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார். எனினும், அந்த கூற்றுக்கு அவர் எந்த ஆதாரமும் வழங்கவில்லை.
‘எம்.வி. ஹீலியோஸ் ரே’ என வாகன- சரக்கு கப்பல் வெள்ளிக்கிழமை இரவில், வெடிப்பு சம்பவத்தால் பாதிக்கப்பட்டது. இதன்போது மேல் புறங்கள் கிழிக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர்.
இச் சம்பவத்தையடுத்து இந்த கப்பல் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பழுதுபார்க்க டுபாய் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த வெடிப்புக்கு என்ன காரணம் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
பாதுகாப்பு அமைச்சர் பென்னி காண்ட்ஸ் சனிக்கிழமையன்று வெடிப்பிற்கு ஈரான் தான் காரணம் என்று ஒரு ஆரம்ப மதிப்பீட்டில் கண்டறியப்பட்டதாக தெரிவித்தார். அதே நேரத்தில் அமெரிக்கா மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கான இஸ்ரேலிய தூதர், தெஹ்ரானை வெடிப்புக்கு குற்றம் சாட்டியதாகத் தெரிகிறது. இது பிராந்தியத்தில் பாதுகாப்பு கவலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சம்பவம் குறித்து விசாரிக்க இஸ்ரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் டுபாய்க்கு சென்றுள்ளதாக ஹாரெட்ஸ் செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்குள் நாட்டின் நான்காவது தேர்தலில் மறுதேர்தலை எதிர்பார்க்கும் இஸ்ரேலிய பிரதமர், இதற்கு பதிலடி கொடுப்பாரா என்ற கேள்வி தற்போது எழுந்துள்ளது.