நியூசிலாந்தில் 7 நாட்களுக்கு மீண்டும் பொதுமுடக்கம்!
27 Feb,2021
கொரோனா பரவல் காரணமாக நியூசிலாந்து நாட்டின் பெரிய நகரான ஆக்லாந்தில் நாளை முதல் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று அந்நாட்டின் பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் தெரிவித்துள்ளார்.
உலகளவில் கொரோனா பரவலை பெருமளவு கட்டுப்படுத்திய வெற்றிகரமான நாடுகளுள் நியூசிலாந்தும் ஒன்றாகும். அங்கு இதுவரை சுமார் 2,000 பேர் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு பெரிய நகரமான ஆக்லாந்தில் சுமார் 20 லட்சம் பேர் வசிக்கின்றனர். இந்நகரில் உள்ள குடும்பத்தைச் சேர்ந்த 3 பேருக்கு இங்கிலாந்து வகை கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
ஆனால் இவர்களுக்கு எங்கிருந்து யாரிடமிருந்து தொற்று பரவியது என சுகாதாரத்துறையினரால் கண்டறிய முடியவில்லை. கடந்த ஞாயிறு முதல் இவர்களுக்கு தொற்று பரவியிருக்கலாம் எனவும் செவ்வாக்கிழமை முதல் இவர்களுக்கு அறிகுறி தென்படத் தொடங்கியதாகவும் தெரியவந்தது. அதே நேரத்தில் இவர்கள் பல இடங்களுக்கும் சென்று வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதன் காரணமாக ஆக்லாந்தில் நாளை காலை முதல் 7 நாட்களுக்கு மீண்டும் பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என்று பிரதமர் ஜெசிந்தா அறிவித்துள்ளார். 3ம் நிலை கட்டுப்பாடுகளுடன் இந்த ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசியமான பயணங்கள், அவசியமான ஷாப்பிங் போன்றவற்றிற்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்நகரில் பொது இடங்கள் மூடப்படும் எனவும் நாட்டின் பிற பகுதிகளில் 3ம் நிலை கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் கூடும் நிகழ்ச்சிகளுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு வாரங்களுக்கு முன்னர் இதே போல நியூசிலாந்தில் 3 நாட்களுக்கு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டது நினைவுகூறத்தக்கது.
ஊரடங்கு காரணமாக வரும் வெள்ளிக்கிழமையன்று ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டி20 போட்டி ஆக்லாந்தில் இருந்து வெலிங்டனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவுக்கு தடுப்பூசி கண்டறிந்து தடுப்பூசி போடும் பணிகளுக்கு மத்தியிலும் தற்போது அமெரிக்கா, இந்தியா உட்பட உலகின் பல நாடுகளிலும் கொரோனா பரவல் வேகம் எடுத்துள்ளது கவலையளிப்பதாக உள்ளது. மீண்டு வரும் பொருளாதார நடவடிக்கைகள் மீண்டும் இன்னலுக்கு ஆளாகுமோ என்ற அச்சமும் இதன் மூலம் ஏற்பட்டுள்ளது.