யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் : ஈரான் எச்சரிக்கை
25 Feb,2021
ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா கடந்த 2018-ம் ஆண்டு வெளியேறியதிலிருந்து இரு நாடுகளுக்கும் இடையில் கடுமையான மோதல் போக்கு நீடிக்கிறது. இந்த சூழலில் அமெரிக்காவில் தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய ஜனாதிபதியாக ஜோ பைடன் பதவியேற்றுள்ளார்.
எனவே அமெரிக்கா மீண்டும் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு திரும்ப ஜோ பைடன் நிர்வாகத்தை ஈரான் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
அதே சமயம் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்துக்கு முழுமையாக இணங்கி நடந்தால் அந்த ஒப்பந்தத்தில் மீண்டும் இணைவது பற்றி தீவிரமாக பரிசீலிக்கப்படும் என ஜோ பைடன் நிர்வாகம் கூறிவருகிறது.
இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தத்தின் விதிமுறையை மீறி யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் எச்சரித்துள்ளது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் படி ஈரான் யுரேனியம் எரிபொருளை 3.67 சதவீதத்துக்கும் மேல் செறிவூட்டக்கூடாது என்பது நிபந்தனையாகும். ஏற்கனவே இந்த நிபந்தனையை மீறி விட்ட ஈரான் கடந்த மாதம் யுரேனியம் செறிவூட்டலை 20 சதவீதமாக அதிகரித்தது.
இந்த நிலையில்தான் தேவை ஏற்பட்டால் யுரேனியம் செறிவூட்டல் 60 சதவீதமாக உயர்த்தப்படும் என ஈரான் மூத்த மத தலைவர் அயத்துல்லா அலி காமெனி தெரிவித்துள்ளார்.