இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற சீனா தயார்
23 Feb,2021
இந்தியா தலைமை ஏற்று நடத்தும், 'பிரிக்ஸ்' மாநாட்டுக்கு முழு ஆதரவு அளிப்பதோடு, ஐந்து நாடுகளுடன் ஒத்துழைப்பை வலுப்படுத்த, இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவோம்' என, சீனா உறுதி தெரிவித்துள்ளது.
பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா ஆகிய ஐந்து நாடுகள் இணைந்து, 'பிரிக்ஸ்' மாநாட்டை, ஆண்டுதோறும் நடத்தி வருகின்றன. இந்த ஆண்டுக்கான மாநாட்டை, இந்தியா தலைமை ஏற்று நடத்துகிறது. இதற்கான இணையதளத்தை, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், சமீபத்தில் துவக்கி வைத்தார்.இம்மாநாடு குறித்து, சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் வாங் வென்பின் கூறியதாவது:'பிரிக்ஸ்' என்பது, வளர்ந்து வரும் பொருளாதாரங்கள் மற்றும் வளரும் நாடுகளை உள்ளடக்கிய உலகளாவிய செல்வாக்குடன் கூடிய ஒத்துழைப்பு அமைப்பு. சமீப ஆண்டுகளில், இது அதிக ஒற்றுமை, ஒத்துழைப்பு மற்றும் அதிக செல்வாக்கை அடைந்து வருகிறது.
சர்வதேச விவகாரங்களில், சாதகமான, நிலையான மற்றும் ஆக்கப்பூர்வமான சக்தியாக, 'பிரிக்ஸ்' கருதப்படுகிறது.இந்த ஆண்டுக்கான, 'பிரிக்ஸ்' மாநாட்டை நடத்தும் இந்தியாவுக்கு, எங்கள் முழு ஆதரவை அளிப்போம். மேலும், இந்தியா மற்றும் உறுப்பு நாடுகளுடனான பேச்சு மற்றும் உறவை வலுப்படுத்தவும், ஒத்துழைப்பை விரிவுபடுத்தவும், கொரோனா தொற்றை போக்கி, பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும், சர்வதேச நிர்வாகத்தை மேம்படுத்தவும், சீனா உறுதி ஏற்றுள்ளது.இவ்வாறு, அவர் கூறினார்.
கிழக்கு லடாக் எல்லையில், 10 மாதங்களுக்கும் மேலாக நிலவி வந்த மோதலை கைவிட்டு, சீன படைகள் வாபஸ் பெறத் துவங்கியுள்ள நிலையில், சீனாவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.