விமானத்தில் தீ பிடித்ததாக சார்ஜா சிவில் விமான போக்குவரத்து துறை விளக்கம்
22 Feb,2021
இது குறித்து சார்ஜா சிவில் விமான போக்குவரத்து துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
சார்ஜா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துருக்கி நாட்டுக்கு கார்கோ விமானம் ஒன்று நேற்று புறப்பட்டு சென்றது. அந்த விமானம் புறப்பட்ட 2-வது நிமிடத்தில் விமானத்தில் இருந்து லேசாக புகை வந்ததை விமானி உணர்ந்தார்.
இது குறித்து அவர் விமான கட்டுப்பாட்டு மையத்துக்கு தகவல் தெரிவித்தார். அந்த விமானத்தின் என்ஜின் ஒன்று பழுதடைந்துள்ளது என தெரிவித்தார். பின்னர் அந்த விமானத்தில் ஏற்பட்ட பழுதை விமானியே தனது முயற்சியால் சரிசெய்தார்.
இதன் காரணமாக புகை வருவது நின்றது. விமானம் நல்ல நிலையில் இருப்பதாகவும், தொடர்ந்து தனது பயணத்தை மேற்கொள்வதாகவும் விமானி கட்டுப்பாட்டு மையத்துக்கு தெரிவித்தார். இதனால் மேற்கொண்டு எந்தவொரு நடவடிக்கையும் தேவையில்லாத நிலைமை ஏற்பட்டது.
இந்த நிலையில், அந்த விமானம் குறிப்பிட்ட நேரத்தில் துருக்கி நாட்டில் பத்திரமாக தரையிறங்கியது. ஆனால் ஒருசிலர் இந்த விமானத்தில் தீப்பிடித்து விட்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரப்பினர்.
சில மணி நேரத்தில் இந்த தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பின்னர் இதன் உண்மை தன்மை குறித்து அறிந்த ஒரு சிலர் தங்களது வருத்தத்தை பதிவு செய்தனர்.
விமானம் புறப்பட்ட போது லேசான புகை இருந்தது உண்மை தான். ஆனாலும் அது சரிசெய்யப்பட்டு விட்டது. ஒரு சிலர் இதுகுறித்து தவறாக பரப்பியுள்ளனர். பொதுமக்கள் இதுபோன்று வரும் தகவலை அரசுத்துறையின் தகவல் தளத்தில் சென்று உறுதி செய்ய கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறான தகவலை பரப்புவோர் மீது மிகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.