ரஷ்ய எதிர்க்கட்சி தலைவரின் மேல்முறையீடு தள்ளுபடி
21 Feb,2021
மாஸ்கோ: ரஷ்ய அதிபர் புடினையும், அவரது அரசின் செயல்பாடுகளையும், எதிர்க்கட்சி தலைவர் அலெக்சி நவால்னி, கடுமையாக விமர்சித்து வந்தார்.
இதையடுத்து, புடின் அரசு, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தி, அவரை தேர்தலில் போட்டியிட முடியாமல் செய்தது. இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் டாம்ஸ்க் நகரிலிருந்து மாஸ்கோவுக்கு விமானத்தில் செல்லும்போது நவால்னி மயங்கி விழுந்தார். இதனைத் தொடர்ந்து, அவர் ஜெர்மனி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். டாக்டர்களின் பரிசோதனையில், அவர் குடித்த டீயில் விஷம் கலக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது, பரபரப்பை ஏற்படுத்தியது.
சிகிச்சைக்குப் பின், ஜெர்மனியிலிருந்து, கடந்த மாதம், 17ல் ரஷ்யா திரும்பினார் நவால்னி. ஆனால், மாஸ்கோ விமான நிலையத்திலேயே, அவர் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிரான மோசடி வழக்கு ஒன்றில், அவருக்கு, கடந்த, 3ம் தேதி, மூன்றாண்டு சிறை தண்டனை விதிக்கப்ட்டது. இதை எதிர்த்து, மாஸ்கோ நீதிமன்றத்தில், நவால்னி மேல் முறையீடு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை, நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்தது.