ஈரான் தயாரித்துள்ள தடுப்பூசி 90 வீதம் பயனளிப்பதாக அறிவிப்பு!
21 Feb,2021
உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள தடுப்பூசியை, மனிதர்களிடையே பரிசோதித்துப் பார்த்ததில் 90 வீதம் பயனளிப்பதாக ஈரான் அறிவித்துள்ளது.
கோவ்-ஈரான் பரேகற் (COV-Iran Barekat) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசியானது, பரிசோதனையில் பங்கேற்ற தன்னார்வலர்களுக்கு நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்துள்ளதாக, குறித்த தடுப்பூசிப் பரிசோதனையின் தலைமை அதிகாரி மொஹமட் ரெசா சலேஹி தெரிவித்துள்ளார்.
அத்துடன், இந்தத் தடுப்பூசியின் இரண்டு அளவுகளைப் பெற்றவர்களில் 90 வீதத்தினர், நோய் எதிர்ப்பு சக்திக்கான சான்றுகளை வெளிப்படுத்துகிறார்கள் என ஆரம்ப முடிவுகள் காட்டுவதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, மேலும் துல்லியமான முடிவுகளுக்கு அதிக பரிசோதனைகள் தேவைப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானியாவில், முதன்முதலில் கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக பரேகற் தடுப்பூசி நூறு வீதம் பயனுள்ளதாக இருப்பதாக அதிகாரிகள் முன்பு கூறியிருந்தனர்.
இதேவேளை, தடுப்பூசியின் மனித சோதனைகளின் முதல் கட்டத்தில் மொத்தமாக 56 தன்னார்வலர்களுக்கு டிசம்பர் பிற்பகுதியில் முதல் ஊசியும், இவ்வருடம் பெப்ரவரி தொடக்கத்தில் அனைத்து தன்னார்வலர்களும் இரண்டாவது ஊசியையும் பெற்றுக் கொண்டனர்.
இந்நிலையில், மனித சோதனைகளின் இரண்டாம் கட்டம் எதிர்வரும் மார்ச் 20ஆம் திகதி ஆரம்பித்து மே வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பரேகட் தடுப்பூசி பரிசோதனையை ஈரானின் உயர் தலைவர் அயதுல்லா அலி காமெனியின் கீழ், அரசு நடத்தும் சக்திவாய்ந்த அமைப்பான செட்டாட் நிர்வகித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.