மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீது கனடா, இங்கிலாந்து பொருளாதாரத் தடை விதிப்பு
20 Feb,2021
கடந்த பிப்ரவரி 1-ம் தேதி தேர்தல் முறைகேடு தொடர்பாக மியான்மர் அரசு தலைவர் ஆங் சான் சூகியை உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை கைது செய்த மியான்மர் இராணுவம் ஜனநாயக ஆட்சியை கவிழ்த்தது.
அதனை எதிர்த்து கோடிக்கணக்கான மியான்மர் மக்கள் தொடர்ந்து இரண்டு வாரங்களாக பல வெவ்வேறு விதமான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் இராணுவ ஆட்சியை இடைவிடாமல் எதிர்த்து, தலைவர் ஆங் சான் சூகியை விடுவிக்க முயன்று வருகின்றனர். போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து சுமார் 495 பொதுமக்கள் ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னதாக, ராணுவத்துக்கு எதிராகப் போராடுபவர்களுக்கு சுமார் 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று மியான்மர் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது. மேலும், பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் அளிக்கும் வகையில் நடந்துகொண்டால் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தினால் மியான்மர் கடுமையான விளைவுகளை சந்திக்கும் என்று ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்தது. கடந்த வாரம் மியான்மர் ராணுவ அதிகாரிகள் மீதும் அவர்கள் குடும்பத்தினர் மீது அமெரிக்க பொருளாதாரத் தடையை விதித்தது.
இந்நிலையில் தற்போது இங்கிலாந்தும், கனடாவும் மியான்மரின் 9 ராணுவ அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதித்துள்ளன. இதுகுறித்து இங்கிலாந்து வெளியுறவுத் துறை அமைச்சகம் தரப்பில், “நாங்கள் எங்கள் நட்பு நாடுகளுடன் இணைந்து மியான்மர் மக்களுக்கு நீதி கிடைக்க ராணுவத்திற்கு எதிராக நடவடிக்கைகளை எடுப்போம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மியான்மர் ராணுவ தலைவர் மின் அங், மீது இங்கிலாந்து அரசு ரோஹிங்கியா விவகாரத்திலேயே பொருளாதாரத் தடை விதித்து இருந்தது. புதிய பொருளாதாரத் தடை குறித்து மியான்மர் ராணுவம் தரப்பில் இதுவரை எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.