ஏழை நாடுகளுக்கு 5 சதவீத தடுப்பூசி அளவுகளை அனுப்புமாறு பிரான்ஸ் ஜனாதிபதி கோரிக்கை!
                  
                     19 Feb,2021
                  
                  
                      
					  
                     
						
	 
	 
	ஐரோப்பாவையும் அமெரிக்காவையும் தங்கள் கொரோனா வைரஸ் தடுப்பூசி விநியோகத்தில் 5 சதவீதத்தினை வளரும் நாடுகளுக்கு அனுப்புமாறு பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் அழைப்பு விடுத்துள்ளார்.
	 
	தடுப்பூசிகளைப் பகிர்ந்து கொள்ளத் தவறுவது உலகளாவிய சமத்துவமின்மையை ஏற்படுத்தும் என மக்ரோன் தெரிவித்தார்.
	 
	தடுப்பூசிகளில் பெரும்பாலானவை இதுவரை அதிக வருமானம் கொண்ட நாடுகளால் நிர்வகிக்கப்படுகின்றன.
	 
	பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இன்று (வெள்ளிக்கிழமை) உலகத் தலைவர்களின் ஜி-7 மெய்நிகர் உச்சிமாநாட்டிற்கு முன்னதாக ஏற்றத்தாழ்வை நிவர்த்தி செய்வதற்கான தனது திட்டத்தை முன்மொழிந்தார்.
	 
	கோவக்ஸ் என அழைக்கப்படும் உலகளாவிய தடுப்பூசி பகிர்வு திட்டத்திற்கான நிதியுதவியில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் 4 பில்லியன் டொலர்கள் உறுதிமொழியை அறிவிப்பார் என்று வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
	 
	கூட்டத்திற்குத் தலைமை தாங்கும் பிரித்தானிய பிரதமர் பொரிஸ் ஜோன்சன், கோவாக்ஸுக்கு எஞ்சும் கொவிட்-19 தடுப்பூசி அளவுகளை அர்ப்பணிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
	 
	இன்றுவரை, உலகளவில் குறைந்தது 110 மில்லியன் மக்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் 2.4 மில்லியனுக்கும் அதிகமானோர் இறந்துள்ளனர் என்று ஜோன்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.