சுகாதார- அவசர செய்திகளை கூட பேஸ்புக் இருட்டடிப்பு செய்திருப்பது அராஜகம்: ஆஸி
19 Feb,2021
அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ள பேஸ்புக்கின் முடிவினை பிரதமர் ஸ்கொட் மோரிஸன் கடுமையாக விமர்சித்து கண்டனம் வெளியிட்டள்ளார்.
முன்னணி சமூகவலைத்தளமான பேஸ்புக், அவுஸ்ரேலிய பயனர்களை செய்தி உள்ளடக்கத்தைப் பகிர்வதிலிருந்தோ அல்லது பார்ப்பதிலிருந்தோ தடுத்துள்ளது. இது ஒரு முன்மொழியப்பட்ட சட்டத்தின் பிரதிபலிப்பாக வருகிறது.
சமூக வலைத்தளங்கள் இனி அவுஸ்ரேலிய செய்தி நிறுவனங்களின் செய்திகளை பயன்படுத்த அந்நிறுவனங்களுக்கு பணம் செலுத்தவேண்டும் என்று அவுஸ்ரேலியாவில் புதிய சட்டம் முன்மொழியப்பட்டது.
இதன் காரணமாக பேஸ்புக்கில் எந்த ஒரு செய்திகளை படிக்கவும், பகிரவும் அவுஸ்ரேலிய பயனர்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது.
அனைத்து உள்ளூர் மற்றும் உலகளாவிய செய்தி தளங்களின் பேஸ்புக் பக்கங்கள் கிடைக்கவில்லை என்பதைக் கண்டு அவுஸ்ரேலியர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பல அரசாங்க சுகாதார மற்றும் அவசர பக்கங்களும் தடுக்கப்பட்டன.
பேஸ்புக்கின் இந்த முடிவினால் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளதாக பிரதமர் ஸ்கொட் மோரிஸன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,
‘பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் உலகை மாற்றி அமைக்கக்கூடும். ஆனால் அதற்கு அர்த்தம், அவர்கள் உலகை இயக்க வேண்டும் என்பது அல்ல.
அவுஸ்ரேலியாவை நட்புவட்டத்தில் இருந்து பேஸ்புக் நீக்கி உள்ளது. சுகாதார, அவசர செய்திகளை கூட பேஸ்புக் இருட்டடிப்பு செய்திருப்பது அராஜகம். இது ஏமாற்றம் அளிக்கிறது.
நான் இந்த பிரச்சினைகள் தொடர்பாக எப்போதும் உலக தலைவர்களை தொடர்பு கொண்டு வந்தேன். எங்களை இதன்மூலம் மிரட்டி விட முடியாது. கூகுள் போல இந்த விடயத்தில் பேஸ்புக், அரசாங்கத்துடன் ஆக்கப்பூர்வமாக நடந்துகொள்ள வேண்டும். நல்ல நம்பிக்கையை நிரூபிக்க வேண்டும்’ என கூறினார்.