சில வரி செய்திகள் இந்திய துாதரகம் அறிவிப்பு
13 Feb,2021
துபாய்: ஐக்கிய அரபு நாடான துபாயில் கடந்த சில வாரங்களாக கொரோனா பரவல் வேகம் அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு வசிக்கும் இந்தியர்களுக்கு நம் துாதரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில் 'துாதரக சேவைகளுக்காக நேரில் வருவதை முற்றிலும் தவிர்த்து இ --- சேவை வாயிலாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்' என கூறப்பட்டு உள்ளது.
மசூதி இடிந்து 3 பேர் பலி
லாகூர்: நம் அண்டை நாடான பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண தலைநகர் லாகூரில் கட்டுமான பணிகள் நடக்கும் மசூதியின் மினார்வா நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது. இடிபாடுகளுக்குள் சிக்கிய மூன்று தொழிலாளர்கள் பலியாயினர்; காயமடைந்த 11 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
பனியில் பிரசவம்
பெர்லின்: ஐரோப்பிய நாடான ஜெர்மனியின் நியூரம்பெர்க் நகரில் வீடற்ற ஒரு தம்பதி கூடாரத்தில் வசிக்கின்றனர். நிறை மாத கர்ப்பிணியான 20 வயது பெண்ணுக்கு நேற்று அந்த கூடாரத்தில் குழந்தை பிறந்தது. அங்கு உறைபனிக்கும் கீழ் மைனஸ் 15 டிகிரி செல்சியஸ் குளிர் நிலவியதால் கூடாரத்தில் தவித்த தாய், குழந்தையை போலீசார் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மோசடி நபர் சிக்கினார்
வாஷிங்டன்: அமெரிக்காவில் கொரோனா பாதிப்பில் இருந்து சிறு வணிகர்கள் மீள்வதற்கான நிதி உதவி திட்டம் கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்டது. வாஷிங்டனில் வசிக்கும் இந்திய வம்சாவளி இன்ஜினியர் சுஷாங்க் ராய் 30, போலி ஆவணங்கள் உதவியுடன் இத்திட்டத்தில் 75 கோடி ரூபாய் பெற முயன்றபோது சிக்கினார். விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை சுஷாங்க் ஒப்புக்கொண்டுள்ளதாக அந்நாட்டு நீதித்துறை தெரிவித்துள்ளது.